நடிகர் ரஜினிகாந்த் என்ன மனநிலையில் உள்ளார் என்பது அவருக்குதான் தெரியும் என தமிழருவி மணியன் கூறியுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினிகாந்த் நேற்று முன்தினம் 38 மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், மாவட்ட செயலாளர்களுடன் நடந்த சந்திப்பில் அவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தார்கள். நானும் எனது கருத்தை அவர்களுடன் பகிர்ந்துகொண்டேன். நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் உங்கள்கூட இருப்போம் என்று கூறினார்கள். நானும் எனது முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் தெரிவிக்கிறேன் என கூறினார்.

இந்நிலையில், சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினியை காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் இன்று சந்தித்துள்ளார். சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழருவி மணியன்;- ரஜினி அரசியலுக்கு  வருவாரா என்பது குறித்து எனக்கு தெரியாது. அரசியல் நிலைப்பாட்டை ரஜினியே வெளிப்படுத்துவார். உடல்நலத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சிந்தியுங்கள் என ரஜினியிடம் கூறினேன். ரஜினியின் வாழ்க்கை ஒரு சிறந்த புத்தகம். தமிழக மக்களிடம் எதையும் அவர் மறைக்க தேவையில்லை என்றார். இதுவரை ரஜினி அரசியலுக்கு வருவார் என்று கூறியிருந்த தமிழருவி மணியன் ரஜினிகாந்த் அரசியலுக்கு  வருவாரா என்பது குறித்து எனக்கு தெரியாது கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.