தமிழகத்தில் நேற்று நடந்த 38 நாடாளுமன்றத் தொகுதிகளில் 71 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 
தமிழகத்தில் வேலூர் தவிர்த்து 38 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், காலியாக உள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும். புதுச்சேரியி நாடாளுமன்றம் மற்றும் தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிகளில் 822 பேரும் 18 சட்டப்பேரவை தொகுதிகளில் 269 பேரும் போட்டியிடுகிறார்கள். வாக்களிப்பதற்காக மாநிலம் முழுவதும் 67,720 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.


 நேற்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கிய உடனே வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களிக்க வந்தனர். பல வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்தனர். வெயிலையும் பொருட்படுத்தாமல் முதியவர்கள் ஆர்வமுடன் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்கள். புதிய வாக்காளர்கள் முதன் முறையாக வாக்கை பதிவு செய்து மகிழ்ந்தனர்.
ஒரு சில வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு  இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப்பதிவு சற்று தாமதமாக தொடங்கியது. ஒரு சில இடங்களில் நடந்த சிறு மோதல்களை தவிர்த்து தமிழகம் முழுவதும் தேர்தல் அமைதியாக நடைபெற்றது. காலையில் 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. தாமகதாக வாக்குப்பதிவு தொடங்கிய இடங்களில் மட்டும் இரவு 9 மணிவரை வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார்கள். மதுரையில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.
மாலை 6 நிலவரப்படி மாநிலம் முழுவதும் 69.55 சதவீத வாக்குகள் பதிவானதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். பின்னர் இரவு 9 மணி நிலவரப்படி 70.90 சதவீதம் வாக்குகள் பதிவானதாக அறிவித்தார். தமிழகத்தில் அதிகபட்சமாக நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் 79.75 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் 57.43 சதவீத வாக்குகளும் பதிவாகின. புதுச்சேரியில் 78 சதவீத வாக்குகள் பதிவாயின.


கடந்த 2014-ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில்  சராசரியாக 73.68 சதவீத வாக்குகள் பதிவாயின. பதிவான வாக்குகள்  தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் துணை ராணுவ படையினருடன் உள்ளூர் போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்குகள் எண்ணிக்கை மே 23-ம் தேதி நடைபெற உள்ளது. வாக்களார்கள் தங்கள் தீர்ப்பை அளித்துவிட்டார்கள். அது என்ன என்பதை அறிய இன்னும் 34 நாட்கள் அரசியல் கட்சிகள் காத்திருக்க வேண்டும்.