2021-ம் ஆண்டிலும் அதிமுக ஆட்சி தொடரும் என்பதைத்தான் அதிசயம் நிகழும் என ரஜினி கூறியிருப்பார் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் கூறியதாவது: 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் தமிழக மக்கள் மிகப்பெரிய அதிசயத்தையும், அற்புதத்தையும் நிகழ்த்திக் காட்டுவார்கள் என தெரிவித்தார்.

இது தொடர்பாக தூத்துக்குடி விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர் ரஜினி சொன்னது என்ன அதிசயம் என தெரியவில்லை. அவர் எந்த அடிப்படையில் அதிசயம் என கூறினார் என தெரியவில்லை. 2021-ல் அதிமுக ஆட்சி தான் மலரும் என்ற அதிசயத்தை அவர் சொல்லியிருக்கலாம். ரஜினி இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை. கட்சி ஆரம்பிக்கட்டும். அதன் பிறகு அவர் குறித்து கருத்து பேசலாம் என்றார். 

நாடாளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணியே உள்ளாட்சித் தேர்தலிலும் தொடர்கிறது. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றார். மறைமுக தேர்தலை மு.க.ஸ்டாலின் எதிர்ப்பது விந்தையாக உள்ளது. அவர், உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தபோது, சட்டப்பேரவையில் மறைமுக தேர்தலை நியாயப்படுத்தி பேசியுள்ளார். ஸ்டாலின் சொன்னால் சரி என்கிறார்கள். நாங்கள் செய்தால் தவறு என்கிறார்கள் என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.