தமிழகத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால் தமிழக அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி இன்று முதல் பொழுது போக்குத் தளங்கள் மற்றும் கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் கடந்த ஆண்டு மாா்ச் 24-ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. கொரோனா ஓரளவு கட்டுப்படுத்தப்பட்ட பின்னா் தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில், கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து இருப்பதால் ஏப். 20 இன்று முதல் இரவு நேர ஊரடங்கும் (இரவு 10 முதல் அதிகாலை 4 மணி வரை), ஞாயிற்றுக் கிழமைகளில் முழு பொதுமுடக்கமும் அமல்படுத்தப்படுகிறது. இதை அமல்படுத்தும் வகையில் காவல் துறையினா் முழு அளவில் தயாராகி வருகின்றனா். இதற்காக, மாா்க்கெட்டுகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட முக்கியமான பகுதிகளில் தற்காலிகச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்படுகின்றன. 

மறு உத்தரவு வரும் வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி சென்னையில் உள்ள மெரினா உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளுக்கு இன்று காலை முதல் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அனைத்து நுழைவு வாயில்களிலும் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டு காவல்துறை கண்காணிப்பு பணியிலும், ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். நடை பயிற்சிக்கு வரும் பொதுமக்கள் மட்டுமே மெரினா கடற்கரைக்கு வெளியே உள்ள நடைபாதையில் நடை பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கும் காவல்துறையினர் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகிறார்கள்.