தமிழக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் தலைமைசெயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ள கப்பல்களின் நிலவரம் குறித்து அமைச்சர் ஏ.வ.வேலு கேட்டறிந்தார்.
தமிழக அரசு சார்பாக பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு பொருட்கள் வாங்கப்படுவது வழக்கம். முந்தைய ஆட்சியில் வாங்கப்பட்ட பொருட்கள் பழுதடைந்து விட்டது என்று காரணம் கூறி புதிய பொருட்களுக்கென்று நிதி ஒதுக்கி வாங்கப்படுவது உண்டு. தற்போது தமிழக அரசு சார்பில் புதியதாக கப்பல் வாங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் எ.வே.வேலு தலைமையில் நடைபெற்றது. தற்போதுள்ள கப்பல்கள் போதுமான திறன் குறைந்துவிட்ட காரணத்தால் 2017 -2018 ஆம் ஆண்டுகளில் கப்பல்கள் விற்பனை செய்யப்பட்டுவிட்டநிலையில், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திற்கு புதிய கப்பல்களை தமிழக அரசு வாங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

பழுதடைந்த கப்பல்கள்
பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மின் உற்பத்திக்குத் தேவைப்படும் உள்நாட்டு நிலக்கரியை எடுத்து வருவதற்காக தமிழக அரசினால் நிறுவப்பட்டது. இந்நிறுவனத்திற்குச் சொந்தமான எம்.வி.தமிழ் அண்ணா, எம்.வி.தமிழ் பெரியார் மற்றும் எம்.வி.தமிழ் காமராஜ் ஆகிய 3 கப்பல்கள்களும் பயன்படுத்த இயலாத நிலையில் இருந்தததாலும் பராமரிப்புச் செலவு அதிகரித்த காரணத்தினாலும் கடந்த 2018 ஆம் ஆண்டில் கப்பல் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

புதிய கப்பல்கள் வாங்க ஆலோசனை
கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரை வரை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு தேவையான
நிலக்கரியை. பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் கப்பல் மூலமாக எடுத்து வரும் பணியினை மேற்கொண்டு வந்தது.தற்போது பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்திற்கு பதிலாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமே கப்பல்கள் மூலமாக நிலக்கரியை எடுத்து வரும் பணியினை மேற்கொண்டு வருவதால் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இதனை ஒரு லாபகரமான அமைப்பாக மாற்றுவதற்கு நிலக்கரி மற்றும் இதர சரக்குகளை எடுத்து ஒரு செயல் திறனை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராயப்பட்டு வந்தது. இதனையடுத்து தான் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்திற்கு மீண்டும் புதிய கப்பல்கள் வாங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்றது. இதில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சிவசண்முகராஜா, மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.
