எங்களை சிறைக்குத் தள்ளுவோம் என்ற கூறியவர்களுக்கு சிறையில் களி தின்னும் வாய்ப்பை கடவுள் வழங்கியிருப்பதாக தமிழக சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் சி.வி. சண்முகம், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் ப. சிதம்பரம் கைது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த சி.வி. சண்முகம், “முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்திய நாட்டின் நிதி அமைச்சராக இருந்தவர்,  நாட்டின் பொருளாதாரத்தைச் சீரழித்து கொள்ளையடித்து வெளி நாட்டுக்குப் பணத்தைக் கடத்தியது மிகப்பெரிய குற்றம். இந்தியாவிலேயே முதல் கிரிமினல் சிதம்பரம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.


கனிமொழியால் முன்பு தமிழகத்தின் மானம் கப்பலேறியது. தற்போது, சிதம்பரத்தால் தமிழகத்துக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. ஒரு வழக்கை சந்திக்கக்கூட தைரியம் இல்லாதவர்கள் இவர்கள். அப்படிப்பட்டவர்கள்தான் எங்களைப் பற்றியும், எங்களின் ஆட்சியைப் பற்றியும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். தேர்தல் பிரசாரத்தின்போது, எங்களை சிறைக்கு அனுப்புவோம் எனக் கூறினார்கள். இன்று அவர்கள் சிறையில் களி தின்னும் சந்தர்ப்பத்தை கடவுளாகப் பார்த்து வழங்கியுள்ளார்.” என்று தெரிவித்தார்.