பெரிய மாவட்டங்களுள் ஒன்றாக இருந்த வேலூர் 3 மாவட்டங்களாக பிரிக்கப்படவுள்ள நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் புதிய மாவட்டத்திற்கான கோரிக்கைகள் வலுத்து வருகிறது. 

இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்றபோது தமிழகத்தில் மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 32. ஆனால், தற்போது தமிழக மாவட்டங்களின் எண்ணிக்கை 37. விழுப்புரம் பெரிய மாவட்டமாக இருப்பதால், அதனை இரண்டாகப்பிரித்து கள்ளக்குறிச்சியை தமிழகத்தின் 33-வது மாவட்டமாக ஜனவரி மாதம் அறிவித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

பின்னர் ஜுலை மாதம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்த செங்கல்பட்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்த தென்காசி ஆகிய பகுதிகள் புதிய மாவட்டங்களாக உருவாக்கப்படும் என்று சட்டமன்றத்தில் 110-விதியின் கீழ் அறிவித்தார் முதல்வர். மக்களின் நீண்டநாளைய கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என பலரும் தங்கள் ஆதரவுக்குரல் கொடுத்தனர். 

அதேசமயம், மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும் என்ற கோரிக்கையோடு சுமார் 20 ஆண்டுகளாக காத்திருக்கின்றனர் நாகைமாவட்டதில் இருக்கும் மயிலாடுதுறை பகுதி மக்கள். தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து நாகை பிரிக்கப்பட்டபோதும், பின்னர் திருவாரூர் பிரிக்கப்பட்ட போதும்,  மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. காரணம், புதுவை யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட காரைக்காலின் இருபுறமும் நாகை மாவட்டம் பரந்திருக்கிறது. 

மயிலாடுதுறையைச் சேர்ந்த மக்கள் நாகைக்கு செல்ல வேண்டும் என்றால், காரைக்கால் வழியாகவோ, அல்லது திருவாரூர் வழியாகவோ தான் செல்ல வேண்டும். இதோடு பல நிர்வாக ரீதியிலான சிரமங்களைக் களையவும் மயிலாடுதுறை தனி மாவட்டம் ஆக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர் மயிலாடுதுறை மக்கள்.

கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் உருவான தெலங்கானா மாநிலத்தில், சராசரியாக 12 லட்சம் மக்கள் தொகை கொண்டதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. தமிழகத்தில் திருவள்ளுர், சேலம், கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் 30 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். எனவே, அந்த மாவட்டங்களையும் பிரித்தால் அவற்றை நிர்வகிக்க எளிதாக இருக்கும் என்று கோரிக்கை வைக்கின்றனர் அரசியல் கட்சியினர்.

 

பொள்ளாச்சி, கோபி உள்ளிட்ட பகுதிகளை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கோவை ஈரோட்டில் உள்ள சில அமைப்புகள் தற்போது கோரிக்கை விடுக்கத் தொடங்கியுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் ஒருபடி மேலேபோய், மக்கள்தொகை அடிப்படையில் தமிழகத்தை 60 மாவட்டங்களாக பிரிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். கடந்த 8 மாதங்களில், தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் நிலப்பரப்பை நிர்வாக ரீதியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கும் தமிழக அரசு இந்த கோரிக்கைகளின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.