தமிழகத்தில் 144 தடை ஆணை தான் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி அத்தியாவசியத் தேவைகள் என்ற பெயரில் தேனீர் கடைகள் வரை ஏராளமான கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் நோய்த் தடுப்புக்கு தேவையான நடவடிக்கைகளின் தீவிரத்தை அரசு புரிந்துகொள்ளவில்லை என்பது தெரிகிறது என ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர் தும்மும் போதும், இருமும் போதும் அவருக்கு 3 அடி சுற்றளவில் உள்ளவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படும். சமூக இடைவெளியை உறுதிப்படுத்துவதன் மூலம் தான் இதை தடுக்க வேண்டும். இதற்கான ஒரே தீர்வு ஊரடங்கை கடைபிடிப்பது தான். உலக சுகாதார நிறுவனமும் இதைத் தான் வலியுறுத்துகிறது. இதை மதித்து உலகம் முழுவதும் 140 நாடுகளில், பாதிக்கப்பட்ட பகுதிகளில், ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த பகுதிகளில் 130 கோடி மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வர முடியாமல் தடுக்கப்பட்டுள்ளனர். பல நாடுகளில் மக்கள் வீதிகளுக்கு வருவதை தடுக்க இராணுவத்தினர் ரோந்து வருகின்றனர். இது தான் சிறந்த சமூக இடைவெளி ஆகும்.

தமிழ்நாட்டிலும் இதே அளவு வலிமையான சமூக இடைவெளியை உருவாக்க வேண்டும்; அதன்மூலம் நோய்ப்பரவலை தடுக்க வேண்டும் என்பதற்காகத் தான் ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஒரு வாரமாக நான் வலியுறுத்தி வருகிறேன். பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கைகள் வாயிலாகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வாயிலாகவும் தினமும் இதுகுறித்து விளக்கி வருகிறார். ஆனால், இவ்வளவுக்குப் பிறகும் தமிழகத்தில் 144 தடை உத்தரவு தான் பிறப்பிக்கப் படும் என்று தமிழக முதலமைச்சர் நேற்று மாலை அறிவித்த நிலையில், உடனடியாக அவரை தொலைபேசியில் நான் தொடர்பு கொண்டு, 144 தடையால் எதிர்பார்த்த பயன் கிடைக்காது என்றும், ஊரடங்கு ஆணை தான் பயனளிக்கும் என்றும் விரிவாக விளக்கினேன். ஆனால், அதன்பிறகும் தமிழகத்தில் 144 தடை ஆணை தான் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி அத்தியாவசியத் தேவைகள் என்ற பெயரில் தேனீர் கடைகள் வரை ஏராளமான கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் நோய்த் தடுப்புக்கு தேவையான நடவடிக்கைகளின் தீவிரத்தை அரசு புரிந்துகொள்ளவில்லை என்பது தெரிகிறது.

அதுமட்டுமின்றி, இந்தியாவில் 30 மாவட்டங்களில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு ஆணைகள் உடனடியாக நடைமுறைக்கு வந்த நிலையில், தமிழகத்தில் மட்டும் 30 மணி நேரம் இடைவெளி விடுத்து இன்று மாலை 6.00 மணிக்கு தான் நடைமுறைக்கு வருகிறது. அதைப் பயன்படுத்திக் கொண்டு தான் சென்னையில் இருந்தும், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் ஏதோ விடுமுறைக்கு வீடுகளுக்கு செல்வது போல பேருந்துகளில் கூட்டம், கூட்டமாக பயணித்துக் கொண்டிருக்கின்றனர். பல ஊர்களில் பொதுமக்கள் பேருந்துகளின் கூரைகளில் அமர்ந்து பயணிக்கின்றனர். கொரோனா பாதித்த நகரங்களில் இருந்து செல்லும் இவர்களால் கிராமங்களில் கொரோனா பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

தேனீர் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டிருப்பதால் அங்கு தேவையின்றி கூட்டம் சேருவதற்கும், அதனால் நோய் பரவுவதற்கும் வாய்ப்பு ஏற்படும். கொரோனா நோய்த்தடுப்பின் அடிப்படையே ஓரிடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் இருக்கக்கூடாது என்பது தான். ஓரிடத்தில் இருவர் இருந்தால் கூட, அவர்களில் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு நோய் பரவும் ஆபத்து உள்ளது. ஆனால், 144 தடை என்பது ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் 5 பேர் வரை கூட அனுமதிக்கிறது. 5 பேருக்கு மேல் கூடினால் கூட, அவர்களிடம் ஆயுதம் இல்லாவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. 144 தடை மட்டுமே பிறப்பிக்கப்பட்டிருப்பதால், 5 அல்லது அதற்கும் குறைவான உறுப்பினர்களைக் கொண்ட குழுவோ, குடும்பமோ தமிழகத்தில் எங்கும் சுதந்திரமாக சுற்றி வர முடியும். இதுவா கொரோனா பரவலை தடுக்கும்?

ஜெர்மனியில் கொரோனா நோய்ப்பரவல் வேகம் ஒரு கட்டத்தில் அதிகமாக இருந்த நிலையில், அங்கு கடைபிடிக்கப்பட்ட கடுமையான ஊரடங்கு காரணமாக, கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நேற்று முதல் குறையத் தொடங்கியுள்ளது. இது தான் முன்மாதியான நடவடிக்கை ஆகும். தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் முழுமையாகவும், பகுதியாகவும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் எந்த வாகனத்தில் பயணித்தாலும், அவை பறிமுதல் செய்யப்படும் என அம்மாநில அரசுகள் அறிவித்துள்ளன. ஆனால், தமிழகத்தில் 144 தடைக் காலத்திலும் சொந்த ஊர்தியில் சுதந்திரமாக பயணிக்கலாம் என்று சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இவை நோய்த்தடுப்புக்கு உதவாது.

பெரும் ஆபத்தாக உருவெடுத்துள்ள கொரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்துவதில் இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழக அரசு செயல்பட்டிருக்க வேண்டும்; செயல்பட வேண்டும். ஆனால், தமிழக அரசின் சில செயல்பாடுகள் அவ்வாறு அமையாதது நல்வாய்ப்புக் கேடானது ஆகும் என்று கூறியுள்ளார்