மருத்துவர்கள் முன்வைக்கும் பல்வேறு கோரிக்கைகளை பரிசீலிக்கும் வகையில் மருத்துவர்களை அரசு உடனே அழைத்துப் பேசவேண்டும் இல்லா விட்டால் திட்டமிட்டபடி வரும் 25 ஆம் தேதி முதல் திட்டமிட்டபடி காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்படும் என மருத்துவர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு , நீட் தேர்வுக்கான பயிற்சியை வழங்க இவ்வாண்டு இது வரை  தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டனத்திற்குரியது. உடனடியாக , தரமான நீட் பயிற்சி மையங்களை தொடங்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும். தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் ,ஊதிய உயர்வு, பதவி உயர்வு, அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவக் கல்வியில் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் , நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பல கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஆனால் , இதுவரை இக்கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை. தமிழக அரசு, அரசு  மருத்துவர்களை ஏமாற்றிவருகிறது. வஞ்சித்து வருகிறது. எனவே, தவிர்க்க முடியாத சூழலில்,வரும் 25.10.19 முதல், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கமும் 30.10.19 காலை முதல் 48 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது. அரசு டாக்டர்களின் இந்த வேலை நிறுத்தப் போராட்டங்களால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசின் மெத்தனப் போக்கே இதற்குக் காரணம்.

எனவே, அரசு மருத்துவர்கள் சங்கங்களின் தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி ,அவர்களின் கோரிக்கைகளை ஏற்க வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.