நடிகர் சிவாஜியின் சிலையை மெரினா கடற்கரையில் அமைக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தி கூறினார்.

நடிகர் சிவாஜியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு, காங்கிரஸ் சார்பில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.

நடிகர் சிவாஜிகணேசன், காமராஜருக்கு தோழனாகவும், தொண்டனாகவும், தளபதியாகவும் தமிழகம் முழுவதும் சுற்றி வந்து காங்கிரஸ் கட்சிக்காக உழைத்தார். காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், காமராஜர் கரத்தை வலுப்படுத்தவும் அரும்பாடுபட்டவர். அவரது புகழ் வாழ்க என கூறி, நாங்கள் அஞ்சலி செலுத்துகிறோம்.

காமராஜர் சாலையில் உள்ள சிவாஜியின் சிலை,கடந்த திமுக ஆட்சியில், அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். இதற்கு, உரிய அனுமதி பெற்று சிலை அமைக்கப்பட்டது. தற்போது நீதிமன்ற உத்தரவுபடி இந்த சிலை வேறு இடத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்ற தீர்ப்பை மதித்து, இந்த சிலையை மாற்றும்போது, சிவாஜியின் நினைவு மண்டபத்தில் வைக்க திட்டமிட்டுள்ளனர். அதற்கு பதிலாக கடற்கரையில் தலைவர்கள், கலைஞர்கள், புலவர்கள், பெரியோர்கள் சிலைகளுக்கு அருகில் வைப்பது சிறந்தது என தமிழக அரசுக்கு காங்கிரஸ் சார்பில் தெரிவித்து கொள்கிறேன்.

சிவாஜி சிலையை மணி மண்டபத்தில் வைத்தால், ஒரு பயனும் இல்லை. அங்கு வருபவர்களுக்கு காட்சி பொருளாக அவரது வாழ்க்கை வரலாறு எழுதப்பட்டு இருக்கும். அவர் வாங்கிய பரிசு பொருட்கள், சாதனை கேடயங்கள், விருதுகள் வைக்கப்பட்டு இருக்கும். அதை பார்க்கும்போது, சிலையை பார்ப்பார்கள்.

ஆனால், கடற்கரையில் மற்ற தலைவர்களின் சிலைகளுடன் அமைத்தால், அதை இங்கு வரும் அனைத்து பொதுமக்களும் பார்த்து செல்வார்கள்.

சிவாஜி மணிமண்டபம் கட்டி முடித்து, அனைத்து பணிகளும் முடிந்துவிட்டது. ஆனால், என்ன காரணம் என்று தெரியவில்லை. இன்னும் திறக்கவில்லை.

எனவே, தமிழக முதல்மைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை, உடனடியாக சிவாஜி மணிமண்டபத்தை திறந்து வைக்க வேண்டும் என காங்கிரஸ் சார்பில் கேட்டு கொள்கிறேன். இதையே தமிழகம் முழுவதும் உள்ள சிவாஜி பேரவை மற்றும் ரசிகர்கள் வலியுறுத்துகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.