தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மீண்டும் தலைவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜி.கே.வாசன் பிரிந்து சென்றதை தொடர்ந்து தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன். தமிழகத்தில் ஒழித்துக்கட்டப்பட்ட நிலையில் இருந்த காங்கிரசுக்கு மீண்டும் உயிர் கிடைக்கச் செய்வதர் ஈ.வி.கே.எஸ் என்றே கூறலாம். கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட தி.மு.க கூட்டணியில் அதிக இடங்களை காங்கிரஸ் பெற ஈ.வி.கே.எஸ் முக்கிய காரணமாக இருந்தார். 

காங்கிரசில் இருந்து வாசன் பிரிந்து சென்றதால் எந்த பாதிப்பும் இல்லை என்கிற தோற்றத்தை கச்சிதமாக உருவாக்கி சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு பிரதிநிதித்துவம் பெற்றுத் தந்ததில் ஈ.வி.கே.எஸ்சுக்கு இருந்த பங்கை யாரும் மறுக்க முடியாது. அதே சமயம் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வந்த காரணத்தினால் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனிடம் இருந்த தலைவர் பதவி பறிக்கப்பட்டது. திராவிட பாரம்பரியத்தில் இருந்த வந்தவர் என்கிற காரணத்தினால் காங்கிரஸ் வளர்ச்சிக்கு உதவுவார் என்று நம்பி ராகுல் திருநாவுக்கரசரை தமிழக காங்கிரஸ் தலைவராக்கினார்.

 

ஆனால் திருநாவுக்கரசர் தலைவரான பின்னர் காங்கிரஸ் நிலைமை தமிழகத்தில் மிகவும் மோசமான நிலைக்கே சென்றது. பெரிதாக போராட்டம் நடத்துவது இல்லை என்கிற ஒரு குற்றச்சாட்டு அவர் மீது எழுந்தது. மேலும் அ.தி.மு.க அரசுக்கு எதிராக திருநாவுக்கரசர் அறிக்கை கூட வெளியிடுவதில்லை என்றும் புகார் கூறப்படுகிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் மாநிலம் தோறும் நிர்வாகிகளை மாற்றும் பணியை ராகுல் தொடங்கியுள்ளார். அந்த வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கான மேலிட பொறுப்பாளரான முகுல் வாஸ்னிக் அண்மையில் மாற்றப்பட்டுள்ளார். 

புதிதாக சஞ்சய் தத் என்பவர் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் பொறுப்பாளர் ஆகியுள்ளார். இதே போன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கும் புதிய தலைவரை நியமிக்கும் முடிவில் ராகுல் இருக்கிறார். தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையின் போது கறார் காட்டும் ஒருவர் தான் அடுத்த தலைவராக இருக்க வேண்டும் என்று ராகுல் விரும்புகிறார். அதற்கு ஈ.வி.கே.எஸ் தான் சரியானவராக இருப்பார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளனர். இதனால் விரைவில் தலைவர் மாற்றம் குறித்த தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை மனதில் வைத்துக் கொண்டே தற்போதைய தலைவரான திருநாவுக்கரசரை வெளிப்படையாக ஈ.வி.கே.எஸ் விமர்சிக்க ஆரம்பித்துள்ளாராம்.