Asianet News TamilAsianet News Tamil

அதை விட இது அழகா இருக்குதே: முதல்வர் எடப்பாடியார் லயித்தது எதில்?

ஆட்சியில் இருந்தபோது தி.மு.க. வெறுமனே திட்டங்களை மட்டுமே அறிவிக்கும். ஆனால், அதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்காது. ஆனால், தமிழக முதல்வர் இ.பி.எஸ். கேட்காமலேயே கொடுப்பவர். 

Tamil Nadu Chief Minister Giver without asking
Author
Tamil Nadu, First Published Nov 29, 2019, 6:13 PM IST

* இலங்கை தமிழர்களுக்கு இன்னல்கள் வீரியமாகி இருக்கின்றன. ’புலிகளின் புலனாய்வுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மானின் தளபதிகளான சிரஞ்சீவி மாஸ்டர், இலக்கியா மாஸ்டர் ஆகியோர் மீண்டும் ஈழத்துக்குள் வந்துள்ளனர்!’ என ஒரு பொய்யை கிளப்பிவிட்டு, அதன் அடிப்படையில் தேடுதல் வேட்டையை நடத்தி, ஈழத்தில் டென்ஷனை உருவாக்கியுள்ளனர் அந்நாட்டு ராணுவத்தினர். 
-வன்னி அரசு

* அ.தி.மு.க. அமைச்சரவையில் எதிர்க்கட்சியினர் கண்டு நடுங்குவது ராஜேந்திரபாலாஜியைத்தான். காரணம், கொஞ்சம் கூட யோசிக்காமல் தாட்பூட் வார்த்தைகளில் தாறுமாறாக வறுத்து எடுத்துவிடுவார். அதுவும் தர்பார் ரஜினியை விட மிக மோசமாக ‘கிழி! கிழி!ன்னு கிழிக்கும் நபர்’. என்னதான் அதிரடியாக இருந்தாலும் கூட, ஆன்மீக விஷயத்தில் மனுஷன் பொட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார். அந்த வகையில் சமீப காலமாக அமைச்சரை ‘மஞ்சள் நிறம்’ எனும் ராசி போட்டு ஆட்டுகிறதாம். 
-பத்திரிக்கை கிசுகிசு

* மக்கள் நீதி மய்யம், அ.தி.மு.க., ரஜினி உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்றுவிட்டு இப்போது தி.மு.க.வினுள் வருகிறாராம் பிரஷாந்த் கிஷோர் (பிரபல அரசியல் கன்சல்டண்ட்). இவர் 2014 எம்.பி. தேர்தலில் மோடியை வெற்றி பெற வைத்ததை மட்டுமே இன்னமும் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அதன் பிறகு அவருக்கு கிடைத்த தோல்விகளைப் பற்றி யாரும் பேசுவதில்லை. 
-    விமர்சகர் ரவீந்திரன்

* மகாராஷ்டிரா மாநிலப் பிரச்னையால் நாடாளுமன்றம் அமளிதுமளியாக இருந்தபோது, நாடாளுமன்றக் காவலர்கள் தன்னிடம் அத்துமீறி நடந்துகொண்டார்கள் என்று புகார் சொல்லி புயலைக் கிளப்பினார் கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி. அவருக்கு என்ன நடந்தது? என்று விசாரித்து, அதிர்ச்சியாகியிருக்கிறார் சோனியா-    பத்திரிக்கை செய்தி

* டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் முழுக்க இடதுசாரிகள் மற்றும் சமூக விரோத சக்திகளின் கூடாரமாக மாறிவிட்டது. அந்த பல்கலைக்கழகத்தை இரண்டு ஆண்டுகளாவது மூடினால்தான், அங்குள்ள சமூக விரோத சக்திகளை அடக்க முடியும்.-சுப்ரமணிய சுவாமி

* பிறந்தநாள் என்பது வாழ்வின் இன்னுமொரு நாள், அவ்வளவுதான். அதை மறக்க முடியாத, சிறந்த நாளாக மாற்றுவது மற்றவர்களின் வாழ்த்தும், அன்பும்தான். என் பிறந்த நாளை மறக்க முடியாத நாளாக மாற்றிய உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.
-உதயநிதி ஸ்டாலின்

* ஆட்சியில் இருந்தபோது தி.மு.க. வெறுமனே திட்டங்களை மட்டுமே அறிவிக்கும். ஆனால், அதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்காது. ஆனால், தமிழக முதல்வர் இ.பி.எஸ். கேட்காமலேயே கொடுப்பவர். திட்டங்களை அறிவித்த வுடன், அரசாணையும் வெளியிட்டு, திட்டத்திற்கான இடத்தையும் தேர்வு செய்து வழங்கிவிடுவார். -அமைச்சர் சி.வி.சண்முகம்

* தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க. அரசு, உள்ளாட்சிகளில் சில பதவிகளுக்கு மறைமுக தேர்தலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் யாராவது நீதிமன்றத்துக்கு சென்று தேர்தலை நிறுத்த மாட்டார்களா? என்று எண்ணுகிறது. காரணம், அக்கட்சிக்கு தோல்வி பயம் உள்ளது.
-சி.பி.எம். பாலகிருஷ்ணன்

*திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் துவக்கும் விழாவுக்காக வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 27-ம் தேதி இரவில் ஏலகிரி மலைக்கு வந்து ஹோட்டலில் தங்கினார். பின் மறுநாள் காலையில் மலையை சுற்றிப்பார்த்துவிட்டு, ‘கொடைக்கானலை விட நன்றாக உள்ளதே!’ என சக அமைச்சர்களிடம் லயிப்பாக கமெண்ட் அடித்திருக்கிறார்.
-பத்திரிக்கை செய்தி

* எனக்கு யாருமே போட்டி இல்லை. காமெடியில் சூரி, சந்தானம், யோகிபாபு போன்றவர்கள் எனகு போட்டி, என மற்றவர்கள் நினைக்கின்றனர். காமெடியில் இருந்து நாயகனாக மாறியவர்களும் எனக்கு போட்டி என நினைக்கின்றனர். எனக்கு நான் மட்டுமே போட்டி! எனக்கான வாய்ப்பை, மற்றவர்கள் தட்டிப்பறிக்க முடியாது. 
-    அப்புக்குட்டி

Follow Us:
Download App:
  • android
  • ios