குடியுரிமை சட்டத் திருத்தத்தால் இந்திய மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றபோதிலும், சிலர் தொடர்ச்சியாக இஸ்லாமிய சகோதரர்களிடையே அவர்களது குடியுரிமை பாதிக்கப்படும் என வதந்தி பரப்பி வருகின்றன என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.


குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சென்னையில் பேரணி நடத்த மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவானது. அதன்படி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி சார்பில் இன்று பேரணி நடைபெற உள்ளது. இந்தப் பேரணியில் லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்கப்படுகிறது. கட்சிகளைத் தாண்டி அனைத்து தரப்பினரும் இப்பேரணியில் பங்கேற்க திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். பேரணிக்கு தடை கோரி  தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த நீதிமன்றம், நிபந்தனைகளுடன் பேரணியை நடத்த உத்தரவிடது.
இந்த உத்தரவு வெளியான சில நிமிடங்களில் தமிழக முதல்வர் எடப்பாடி ஓர் அறிக்கையை வெளியிட்டார். அதில், “அதிமுக அரசு சிறுபான்மை மக்களைப் பாதுகாக்கும் பெரிய அரணாக விளங்கி வருகிறது. இந்த அரசு எந்த காலத்திலும் சிறுபான்மை மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாப்பதில் தொடர்ந்து உறுதியாக இருக்கும். குடியுரிமை சட்டத் திருத்தத்தால் இந்திய மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றபோதிலும், சிலர் தொடர்ச்சியாக இஸ்லாமிய சகோதரர்களிடையே அவர்களது குடியுரிமை பாதிக்கப்படும் என வதந்தி பரப்பி வருகின்றன.

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அதிமுக உறுதியாகவும் உள்ளது. சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் நலனிலும், முன்னேற்றத்திலும் பாதுகாப்பிலும் அதிமுக அரசு அக்கறையோடு தொடர்ந்து செயல்பட்டு வருவதால், பொதுமக்கள் தவறான பிரசாரங்களுக்கு செவி சாய்க்காமல் அமைதி காக்க வேண்டும். அமைதிப் பூங்காவாகத் திகழும் தமிழகத்தில், பொதுமக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம்.” என எடப்பாடி பழனிச்சாமி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.