கார்ப்பரேட் வித்தகர் கையில் சிக்கி கொண்ட குரங்கு என்று திமுகவை மறைமுகமாக சாடியுள்ளது தமிழ் நாடு பாஜக.


2021 பொதுத்தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தேர்தல் வியூக மன்னர் பிரசாந்த் கிஷோரை திமுக நியமித்துள்ளது. இந்த நியமனத்தை திமுகவை எதிர்க்கும் கட்சிகள் கிண்டலும் கேலியும் செய்துவருகின்றன. இந்நிலையில் சிஏஏ-வை எதிர்த்து சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்துவரும் போராட்டத்தில் போலீஸார் நடத்திய தாக்குதல், பதில் தாக்குதல் குறித்து காணொலி காட்சிகள் தொடர்ந்து வெளியாகி இருக்கின்றன.
இந்த விவகாரத்தில் தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் திமுகவை விமர்சித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பிரசாந்த் கிஷோர் படத்தையும் கேலிச்சித்திரம் போன்ற ஒரு படத்தையும் நேற்று தமிழக பாஜக வெளியிட்டது. அதில், “தனிச்சையாக போராட்டம் செய்தால் ஆதரிக்க மக்கள் முன்வருவர். திட்டமிட்டு அமைதியை குலைக்க போராட்டம் செய்தால் யாருக்கு இழுக்கு? யோசிக்க வேண்டும் இஸ்லாமிய சகோதரர்கள். @arivalayam-தின் ஜகஜ்ஜால தளபதி  பிகேயாரின் சூழ்ச்சிக்கு பகடைகாய் ஆகும் போராட்டக்காரர்கள் அப்பாவிகளா? அடப்பாவிகளா?” என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று இரவு தமிழக பாஜக ட்விட்டர் பக்கத்தில் வீடியோவை ஒன்றை வெளியிட்டது. குரங்காட்டியின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு செயல்படும் குரங்கு வீடியோ காட்சியாக அது இருந்தது. அந்த வீடியோவின் மேலே ஒரு பதிவும் இடப்பட்டுள்ளது. அதில், “கார்ப்பரேட் வித்தகர் கையில் சிக்கி கொண்ட குரங்கு பாவம். வாயில்லா ஜீவன்களை துன்புறுத்துவது கொடுமையானது, கடுமையாக கண்டிக்கத்தக்கது” என்று திமுகவை மறைமுகமாக சாடியுள்ளதாகவே பார்க்கப்படுகிறது.