தமிழக பாஜக புதிய தலைவராக எல்.முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார். 

கடந்த 2014-ம் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சரானதால், அவர் வகித்து வந்த பாஜக தமிழக தலைவர் பொறுப்பு தமிழிசையிடம் வழங்கப்பட்டது. அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதவியேற்ற அவரது பதவிக் காலம் மீண்டும் நீட்டிக்கப்பட்டது. மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த பாஜக படுதோல்வி அடைந்தது. இதையடுத்து, தமிழிசையால் எந்த வெற்றியையும் பாஜகவால் தமிழகத்தில் பெரிதாக ஈட்ட முடியவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

இதனையடுத்து, தெலங்கானா ஆளுநராக தமிழிசை கடந்த செப்டம்பர் மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின்பு தமிழக பாஜக தலைவர் பதவி மற்றும் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். அதன்பின்னர், தமிழகத்தின் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற எதிர்ப்பார்ப்பு பரவலாக இருந்து வந்தது. இதில், எச்.ராஜா, வானதி சீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், கே.டி. ராகவன், ஏ.பி. முருகானந்தம் உள்ளிட்ட பெயர்கள் அடிபட்டன. சீனியர்கள் என்ற முறையில் பொன்னார் மற்றும் எச்.ராஜாவுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் பரவலாக பேசப்பட்டு வந்தது. 

இந்நிலையில், திடீர் திருப்பமாக யாரும் எதிர்பார்க்காத வகையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராக உள்ள எல்.முருகன் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.