வேல் யாத்திரை தொடர்பாக தமிழக பாஜக பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “வேல் யாத்திரைக்காக பாஜகவினர் எங்கு சென்றாலும் கைது செய்யப்படுகிறார்கள். ஆனால், இதே நடவடிக்கையை திமுக நடத்தும் போராட்டங்களின்போது அதிமுக அரசு ஏன் எடுப்பதில்லை. பாஜகவை கூட்டணி கட்சி என்று கூறும் அதிமுக பாஜக தொண்டர்களை ஏன் இவ்வாறு நடத்துகிறது? அதிமுக அரசை எதிர்த்து திமுக நடத்தும் கூட்டங்களுக்கெல்லாம் அனுமதி கொடுக்கிறார்கள். அங்கேயெல்லாம் எந்த நடவடிக்கையும் இல்லை. இதன் காரணமாக திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே உள்ள புரிதல் என்னவென்ற கேள்வி எழுகிறது.
பாஜகவினர் மீது வழக்குத் தொடரப்பட்டதோடு மட்டுமல்ல, ஆண்டவனின் வேல் ஏந்தி சென்றதற்காக ஆயுத தடுப்பு சட்டத்தை பயன்படுத்த தூண்டுவதாக மாநில டிஜிபி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது. டிசம்பர் 6ம் தேதி வேல் யாத்திரையின் நிறைவு விழா திருச்செந்தூரில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. அதில் கட்சியின் அகில இந்திய தலைவர் ஜே.பி. நத்தா கலந்துகொள்ள உள்ளார் என்பது உறுதி. மேலும் வேல் யாத்திரை தொடர்ந்து நடக்கும். தமிழக அரசின் நடவடிக்கைகளில் உள்நோக்கம் இருக்கிறதாகத் தெரிகிறது. தேர்தல் கூட்டணி தேர்தல் சமயத்தில் முடிவு செய்யப்படும்” என்றும் கே.டி. ராகவன் தெரிவித்துள்ளார்.