ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் அடுத்தமுறை நிச்சயம் ஆஜராவேன். மேலும், ஜெயலலிதா அப்பல்லோவில் இருந்த 72 நாட்களில் ஒருமுறை கூட அவரை பார்க்கவில்லை எனவும் பேரவையில் துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று கஜா புயலில் பாதித்த மக்களுக்கு வீடுகள் கட்டி தர வேண்டும் என்று தி.மு.க. எம்.எல்.ஏ. மதிவாணன் கூறினார். இதற்கு துணை முதல்வர் ஓபிஎஸ் பதில் அளித்து கூறியதாவது:- கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட கஜா புயலால் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டது. 

இந்த மாவட்டங்களில் நகர பகுதியில் பாதிக்கப்பட்ட வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தர தமிழ்நாடு குடிசைபகுதி மாற்று வாரியம் மூலமாக மொத்தம் 28 ஆயிரத்து 671 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தனி வீடுகள் ரூ.1742.22 கோடி செலவில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. கூடிய விரைவில் பணிகள் தொடங்கப்படும். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக நாகை மாவட்டத்தில் 7 ஆயிரத்து 458 தனி வீடுகளும், 5 ஆயிரத்து 308 அடுக்குமாடி குடியிருப்புகளும் ரூ.776.04 கோடி மதிப்பீட்டில் 12 நகரங்களில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. 

மேலும், பேசிய அவர், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 72 நாட்களில் ஒருநாள் கூட அவரை நான் பார்க்கவில்லை என்றும், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அடுத்த முறை நிச்சயம் ஆஜராவேன். ஆணையத்தில் ஆஜராகும்போது எனக்கு தெரிந்த உண்மைகளை சொல்வேன் என்று பேரவையில் கூறினார். அப்போது, குறுக்கிட்ட மு.க.ஸ்டாலின் விஜயபாஸ்கரை விசாரிக்க வேண்டும் என ஓபிஎஸ் முன்பு கூறியதை ஆணையத்தில் கூற வேண்டும் என்று தெரிவித்தார்.