கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்துக்கு அமித்ஷா வராத கோபத்தில் தான் விரக்தியின் உச்சத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார் என்று தினகரன் விமர்சனம் செய்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தினகரன் புதியதாக பொறுப்பேற்றுள்ள திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் குறித்து கடுமையாக சாடியுள்ளார். 

அதிமுகவில் தொடர்ந்து உட்கட்சி பூசல்கள் அதிகரித்து வருகிறது. ஆட்சி, அதிகாரம் இருப்பதால் அவர்கள் ஒற்றுமையாக இருப்பதை போல் வெளி உலகத்துக்கு காட்டிக்கொள்கின்றனர் என்றார். இந்த ஆட்சி விரைவில் தூக்கி ஏறியப்படும். ஆட்சி போனதும் அவர்கள் அனைவரும் நெல்லிக்காய் போல் சிதறி ஓடிவிடுவார்கள். திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று அதிமுக அமைச்சர்கள் கூறி வருவது நகைச்சுவையாக உள்ளது. 

தற்போது காமெடி நடிகர் வடிவேல் அதிகமாக திரைப்படங்களில் நடிப்பதில்லை. எனவே அவர் இல்லாத குறையை தமிழக அமைச்சர்கள் போக்கிக்கொண்டு இருக்கின்றனர். வருகின்ற இடைத்தேர்தலில் அதிமுக டெபாசிட் இழப்பது உறுதி என்று தெரிவித்துள்ளார். இந்த ஆட்சி பறிபோனதும் புகலிடம் தேடி எங்களிடம் வந்தால் அவர்களை நாங்கள் ஏற்க மாட்டோர் என்று கூறினார். 

மேலும் மறைமுகமாக பாஜகவுடன் கூட்டணி வைக்க பார்த்தனர். ஆனால் அந்த கூட்டணி அமையவில்லை. ஆகையால் தமிழகத்தில் காவி மயம் என திமுக தலைவர் பேசுவது, விரக்தியின் விளிம்பில் இருப்பதை காட்டுகிறது என்று கூறியுள்ளார்.