கூட்டணி தர்மம் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்த அறிக்கை அவரது பதவிக்கு ஆப்பு வைக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

ஊரக உள்ளாட்சியின் மறைமுக தேர்தலுக்கு முதல் நாள் யாரும் எதிர்பாராத வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரியும் – சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராமசாமியும் இணைந்து வெளியிட்ட அறிக்கை தமிழக அரசியலில் புயலை கிளப்பியது. மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியில் ஒன்றை கூட திமுக தரவில்லை. ஒன்றிய குழு தலைவர் பதவிக்கும் திமுக தலைமையிடம் இருந்து எதிர்பார்த்த இடங்கள் கிடைக்கவில்லை.

திமுக தலைமை காங்கிரசுக்கு ஒதுக்குமாறு அறிவுறுத்திய இடங்களை கூட மாவட்ட திமுக செயலாளர்கள் தங்கள் கட்சிக்கு வழங்கவில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிக்கை வெளியிட்டிருந்தது. அதோடு மட்டும் அல்லாமல்  திமுகவின் செயல்பாடு கூட்டணி தர்மத்திற்கு எதிராக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. அதாவது கூட்டணி தர்மத்தை திமுக மீறிவிட்டதாக பகீர் குற்றச்சாட்டை சுமத்தியிருந்தார் அழகிரி.

பொதுவாக கூட்டணி தர்மத்தை மீறுபவர் என்றால் அது ஜெயலலிதா தான் என்கிற ஒரு பேச்சு தமிழக அரசியலில் உண்டு. ஆனால் கலைஞர் இருந்த வரை கூட்டணி தர்மம் காக்கப்பட்டு வந்தது. கூட்டணியில் இருந்த ஒரு கட்சி கூட திமுக கூட்டணி தர்மத்தை மீறிவிட்டதாக கூறியதில்லை. 2004 தேர்தல் சமயத்தில் கடைசி நேரத்தில் திருமாவளவனை கலைஞர் கழட்டிவிட்டார். ஆனால் அப்போது கூட திருமாவளவன் கூட்டணி தர்மத்தை திமுக மீறிவிட்டதாக கூறவில்லை.

இந்த நிலையில் திமுக மீது இவ்வளவு பெரிய குற்றச்சாட்டை மிகவும் அசால்ட்டாக காங்கிரஸ் கட்சி கூறியதை திமுக ரசிக்கவில்லை. மேலும் அழகிரி மற்றும் ராமசாமி மீது ஸ்டாலின் கடும் எரிச்சல் அடைந்ததாக சொல்கிறார்கள். இந்த விஷயங்கள் நடக்கும் போது ஸ்டாலின் அந்தமானில் இருந்தார். அறிக்கை குறித்த விவரத்தை தெரிந்து கொண்ட உடன் திமுக உயர்மட்ட நிர்வாகிகளை அழைத்து யாரும் இது குறித்து பதில் கருத்து கூற வேண்டாம் என்று ஸ்டாலினே நேரடியாக உத்தரவு போட்டதாக சொல்கிறார்கள்.

அதோடு மட்டும் அல்லாமல் அழகிரி – ராமசாமியின் அறிக்கையை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மொழிப்பெயர்த்து டெல்லி காங்கிரஸ் தலைமைக்கும் உடனடியாக திமுக தரப்பு புகாராக அனுப்பியுள்ளது. வழக்கமாக திமுக தமிழகத்தில் காங்கிரஸ் தலைவராக இருப்பவர் தங்களுடன் அனுசரித்து போகும் நபராக இருக்க வேண்டும் என்று நினைக்கும். அல்லது வருகின்ற தலைவர் திமுகவுடன் இயல்பாகவே அனுசரித்து போய்விடுவார்.

தலைவர் ஒத்துழைக்கவில்லை என்றால் மேலிடப் பொறுப்பாளரை தங்கள் வசப்படுத்தி வைப்பதும் திமுகவின் அரசியல் சாணக்கியத்தனம். அந்த வகையில் தற்போது மேலிட பொறுப்பாளராக இருக்கும் சஞ்சய் தத் மூலமாக அழகிரி பதவிக்கு ஆப்பு வைக்க திமுக காய் நகர்த்துவதாக சொல்கிறார்கள். இதே போல் ப.சிதம்பரமும், கே.எஸ்.அழகிரிக்கு எதிரான மனநிலையில் உள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் தனது மகனுக்கு சிவகங்கையில் சீட் கிடைக்க தாமதமாக அழகிரி தான் காரணம். அதனை மனதில் வைத்து தற்போது தமிழகத்தில் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த அழகிரி முயற்சிப்பதாக கூறி அவருக்கு எதிரான லாபியை ப.சிதம்பரம் டெல்லியில் தொடங்கிவிட்டதாக கூறுகிறார்கள். இதனை எல்லாம் அறிந்து பதறிய அழகிரி, மறுநாள் தனது கருத்தில் இருந்து பின்வாங்கியது குறிப்பிடத்தக்கது.