நேருவின் வாரிசு பேசுவதை கோட்சேவின் வாரிசுகளுக்கு கசக்கத்தான் செய்யும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவரும், ஊடகத் துறைத் தலைவருமான ஆ.கோபண்ணா எழுதிய மாமனிதர் நேரு - அரிய புகைப்பட வரலாறு என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது.
ராகுல் காந்தியின் பேச்சு பல நேரங்களில் ஜவஹர்லால் நேரு பேசுவதைப் போல இருக்கிறது. நேருவின் வாரிசு அப்படி பேசாமல் இருந்தால் தான் ஆச்சர்யம் என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவரும், ஊடகத் துறைத் தலைவருமான ஆ.கோபண்ணா எழுதிய மாமனிதர் நேரு - அரிய புகைப்பட வரலாறு என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. கோபண்ணாவின் பேத்தி ஆதியா, முதல்வரிடம் நூலைக் கொடுத்தார். தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் நூலை வெளியிட, இந்து என்.ராம் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.
விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின்;- இந்தியா தன்னுடைய அடையாளமாகக் கொண்டிருந்ததும் - இந்தியா தன்னுடைய அடையாளமாகக் கொள்ள வேண்டியதும்- ஜவஹர்லால் நேரு அவர்களைத் தான். எனது அரசியல் வாரிசு நேரு தான் என்று மகாத்மா காந்தி அவர்கள் சொன்னார்கள். காந்தியை உலகமே வியக்கிறது. அத்தகைய காந்தியடிகள் வியக்கும் மனிதராக இருந்தவர் நேரு அவர்கள். நேரு, பளிங்கு போல் தூய்மையானவர். சந்தேகங்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் உண்மையானவர். அச்சமோ, அதிருப்தியோ இல்லாத மாவீரர். ராணுவ வீரனின் துடிப்பும் உண்டு, தேர்ந்த அரசியல்வாதியின் நிதானமும் உண்டு. துணிவில் நேருவை மிஞ்ச ஆள் இல்லை. அவருடைய கரங்களில் தேசம் பாதுகாப்பாக இருக்கிறது - என்று காந்தியடிகள் சொன்னதாக இந்த புத்தகத்தில் அவர் பதிவு செய்திருக்கிறார். இதனால் தான் இன்று வரை நேரு அவர்களின் புகழ் நிலைத்து நிற்கிறது.
நான் ஒரு சோசலிஸ்ட். நான் ஒரு குடியரசுவாதி. மன்னர்களையும் இளவரசர்களையும் நம்புவதில்லை. ஒரு வர்க்கத்தின் மீது இன்னொரு வர்க்கம் செலுத்தி வரும் ஆதிக்கத்தை ஒழிக்க நினைப்பவன் நான் என்று பேசியவர் நேரு அவர்கள். இந்த மேடையில் காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமல்ல, திராவிட இயக்கத்தைச் சேர்ந்த நானும், அதைப்போல பொதுவுடைமை கட்சியைச் சார்ந்திருக்கக்கூடியவர்களும், இதில் கலந்து கொள்வதற்கு இதுதான் காரணம். காங்கிரஸ் கட்சியின் குரலை மட்டுமல்ல, இந்தியாவின் குரலை எதிரொலித்தவர் நேரு அவர்கள். இந்தியா முழுமைக்குமான மனிதராக, இந்தியா முழுமைக்குமான பிரதமராக நடந்து கொண்டார்.
ஒரே மொழி-ஒரே மதம்-ஒரே இனம்-ஒரே கலாச்சாரம்-ஒரே பண்பாடு -ஒற்றைத் தன்மை-ஒற்றை சட்டம் ஆகிய அனைத்துக்கும் எதிராக இருந்தவர் நேரு அவர்கள். மதத்தை சமையல் அறையில் அடைத்துவிடாதீர்கள். எதைச் சாப்பிடலாம், சாப்பிடக் கூடாது, யாரைத் தொடலாம், யாரைத் தொடக்கூடாது என்றெல்லாம் சொல்லி மலினப்படுத்தி விடாதீர்கள் என்று சொன்னவர் நேரு அவர்கள். வகுப்புவாதமும், தேசியவாதமும் சேர்ந்து இருக்க முடியாது என்று சொன்னவர் அவர். அதனால் தான் மதச்சார்பற்ற சக்திகளால் நேரு போற்றப்படுகிறார்.
பின் தங்கியுள்ள ஒவ்வொரு சகோதரனையும் சிலரின் பேராசையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று சொன்னவர் நேரு அவர்கள். திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளில் முதலாவது கொள்கை சமூகநீதியே. 1920 ஆம் ஆண்டு நீதிக்கட்சி போட்ட வகுப்புவாரி உரிமைக்கு 1950 ஆம் ஆண்டு ஆபத்து வந்தது. சென்னை உயர்நீதிமன்றமும் - உச்சநீதிமன்றமும் ஒரே நிலைப்பாட்டை எடுத்தபோது - தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் மிகப்பெரிய போராட்டத்தை தமிழகத்தில் எடுத்தார்கள். பெருந்தலைவர் காமராசர் அவர்கள் மூலமாக இந்தப் போராட்டத்தின் நியாயத்தை அறிந்த பிரதமர் நேரு அவர்கள் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கு உடன்பட்டார். சமூகத்திலும், கல்வியிலும் பின் தங்கியவர்களுக்குச் செய்யும் ஏற்பாடுகள் எதுவும் சட்டப்படி தடை செய்யப்படாது என்பதுதான் அந்த திருத்தம் ஆகும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முதலாவது திருத்தம் அது. தமிழகம் போட்ட விதையை விருட்சம் ஆக்கியவர் பிரதமர் நேரு அவர்கள். அதனால் தான் நேருவை நாம் போற்றுகிறோம்.
சுதந்திர இந்தியாவில் நடந்த மிகப்பெரிய இனப்போராட்டம். மொழிவாரியாக மாகாணங்களைப் பிரிக்க வேண்டும் என்பதாகும். ஒவ்வொரு தேசிய இனத்தின் விருப்பம் இது. இந்த விருப்பத்தின் நியாயத்தை பிரதமர் நேரு அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். அத்தகைய பக்குவமும், முதிர்ச்சியும் அவருக்கு இருந்தது. அதனால் தான் நேருவைப் போற்றுகிறோம். தமிழகத்தின் மீது தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருவது இந்தித் திணிப்பு ஆகும். இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை இந்தி
திணிக்கப்படாது என்ற வாக்குறுதியை வழங்கியவர் பிரதமர் நேரு அவர்கள். நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடையாளமாக அவர் இருந்தார். அதனால் தான் ஜனநாயக சக்திகள் அனைவரும் இங்கே ஒன்றிணைந்து நேருவைப் போற்றுகிறோம். தனது வாழ்நாளில் 11 முறை மட்டுமே தமிழகம் வந்த நேரு அவர்கள். ஆனால் தமிழகத்துக்கு மகத்தான பல சாதனைகளைச் செய்து கொடுத்தவர் அவர்.
* நெய்வேலியில் நிலக்கரிச் சுரங்கம்
* பெரம்பூரில் ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை
* ஊட்டியில் இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை
* கிண்டியில் இந்துஸ்தான் டெலி பிரிண்டர்
* அறுவைச் சிகிச்சைக் கருவிகள் தயாரிக்கும் தொழிற்சாலை
* திருச்சி பெல்
* ஆவடி டேங்க் பேக்டரி
* சென்னை ஐஐடி - இவை அனைத்தும் தமிழ்நாட்டில் பிரதமர்
நேருவின் பெயரைச் சொல்லும் அடையாளங்களாக விளங்கிக் கொண்டிருக்கிறது. ஐந்தாண்டுத் திட்டத்தின் மூலமாக இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் தொழில்கள் சென்று சேரக்கூடிய வகையில் இந்தியாவை ஒன்றுபட்ட இந்தியாவாகப் பார்த்தவர் நேரு.
* ஆனால் தற்போது 2015 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை இன்று வரைக்கும் வரவில்லை என்பதோடு ஒப்பிட்டால் தான் அன்றைய பிரதமர் நேருவின் பெருமையை நாம் உணர முடியும்.
* இன்று எல்லா குறுக்குவழிகளிலும் இந்தி நுழைவதைப் பார்க்கும் போதுதான் நேருவின் பெருமை உயர்கிறது.
* ஒற்றை மதவாதம் தலைதூக்கும் போதுதான் வேற்றுமையில் ஒற்றுமை கண்ட நேருவின் பெருமை உயர்கிறது.
* முக்கியமான எதையும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க மறுக்கக்கூடிய இந்தக் காலத்தில், எதிர் கருத்தினரை அதிகம் பேசவிட்டு ரசித்த அன்றைய பிரதமரின் பெருமையை உணர முடிகிறது.
* பொதுத்துறை நிறுவனங்களை இன்று தொடர்ச்சியாக மூடிக்கொண்டு இருப்பதைப் பார்க்கும் போது தான், அவை தான் நவீன இந்தியாவின் கோவில்கள் என்று சொல்லி உருவாக்கிய அன்றைய பிரதமர் நேரு உயர்ந்து நிற்கிறார்.
இன்றைய இந்திய அரசியல் நிலைமையானது நேருவின் உண்மையான மதிப்பை நமக்கு அடையாளம் காட்டுகிறது.
தமிழ்நாட்டுக்கு இத்தனை ஆண்டுகள் கழித்து தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் தேவைப்படுவதைப் போல, இந்தியாவுக்கு காந்தியடிகளும், மாமனிதர் நேருவும், தேவைப்படுகிறார்கள்.
* கூட்டாட்சியை
* மாநில சுயாட்சியை
* மதச்சார்பின்மையை
* சமத்துவத்தை
* சகோதரத்துவத்தை
* சமதர்மத்தை
* சமூகநீதியை நிலைநாட்டுவதற்கு இவர்கள் தேவைப்படுகிறார்கள். அந்த வகையில் தான் ஒற்றுமை நடைபயணத்தை நம்முடைய அருமைச் சகோதரர் ராகுல் காந்தி அவர்கள் நடத்தி வருகிறார்கள். அந்தப் பயணத்தை தென்குமரியிலிருந்து இந்திய எல்லை வரையில் தொடங்கிய நேரத்தில் நான் தொடங்கி வைக்கக்கூடிய வாய்ப்பை பெற்றேன். அதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். ராகுல் காந்தி அவர்கள் பேச்சு, இந்தியாவில் பூகம்பத்தை இன்றைக்கு உருவாக்கி வருகிறது. அவர் தேர்தல் அரசியலை, கட்சி அரசியலைப் பேசவில்லை. கொள்கை அரசியலைப் பேசுகிறார். அதனால் தான் இன்றைக்கு ஒருசிலரால் கடுமையாக அவர் எதிர்க்கப்படுகிறார். அவரது பேச்சுக்கள் பல நேரங்களில் ஜவஹர்லால் நேரு பேசுவதைப் போல இருக்கிறது. நேருவின் வாரிசு அப்படி பேசாமல் இருந்தால் தான் ஆச்சர்யம்.
கோட்சேக்களின் வாரிசுகளுக்கு மகாத்மா காந்தியின், நேருவின் வாரிசுகளின் பேச்சுகளைப் பார்த்தால் கசக்கத்தான் செய்யும். ஆனால் காலம் மகாத்மா காந்தியை, நேருவை நினைவூட்டிக் கொண்டே இருக்கும் அதனுடைய அடையாளமாகத்தான் இந்த புத்தகம் அமைந்திருக்கிறது. மாமனிதர் நேருவின் சிந்தனைகளை உள்ளடக்கிய காலம் என்பது, இந்தியாவில் மலரட்டும், வளர்ச்சியும், அமைதியும் ஓங்கட்டும் என்று சொல்லி, கோபண்ணா அவர்களுடைய முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் மீண்டும் ஒரு முறை தெரிவித்து கொண்டு உரையை நிறைவு செய்தார்.