ஓ.பி.எஸ் தனது தம்பி ஓ.ராஜாவை கட்சியை விட்டு நீக்கிய பரபரப்பு இன்னும் பற்றி எரிகிறது. ஓ.பி.எஸின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பல காரணங்களை அடுக்கினாலும், நண்பனுக்கு சமாதானம், கொலைப்பழி கோபத்தை குறப்பது என இரு முக்கியக் காரணங்கள் இருப்பதாகக் கூறுகிறார் தேனி மாவட்ட அதிமுகவினர்.  

ஓ.பன்னீர்செல்வம் முதன்முதலில் பெரியகுளம் தொகுதியில் எம்எல்ஏ பதவிக்கு போட்டியிட்டார். அப்போது பெரியகுளம் ஒன்றிய செயலாளராக இருந்த செல்லமுத்துவுக்குதான் சீட் கிடைக்க வேண்டியது. டி.டி.வி தினகரனிடம் செல்லமுத்துவுக்கு அதிக செல்வாக்கு இருந்தது. ஓ.பன்னீர்செல்வம் - செல்லமுத்து இருவரையும் அழைத்த டி.டி.வி.தினகரன் உங்கள் இருவரில் யாராவது ஒருவருக்குதான் சீட் என்றாராம்.

அப்போது செல்லமுத்து எம்எல்ஏ சீட்டை ஓ.பன்னீர்செல்வத்துக்கு விட்டுக்கொடுத்தாராம். இதற்கு பலனாக இன்றுவரை ஓ.பன்னீர்செல்வம் தனது நன்றியை செல்லமுத்துவுக்கு காட்டி வருகிறார். ஆனால், தற்போது நடந்த ஆவின் தலைவர் தேர்தலில் செல்லமுத்துக்கு போட்டியாக ஓ.பிஎஸின் தம்பி ஓ.ராஜா போட்டியிட்டு பதவியை பிடித்து விட்டார். இதனால், ஓ.பிஎஸ் மீது செல்லமுத்துக்கு வருத்தம். தம்பியை கட்சியில் இருந்து நீக்கினால் செல்லமுத்து சமாதானம் ஆகிவிடுவார் என கணக்கு போட்ட ஓ.பி.எஸ் அதையும் செய்தே விட்டார்.

இதற்கு மற்றொரு காரணம் இருப்பதாக கூறுகிறார்கள். செல்லமுத்துவின் சொந்த ஊர் பெரியகுளம் அருகில் உள்ள டி.கள்ளிப்பட்டி. இந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்கொலை வழக்கில் ஓ.ராஜா மீது குற்றம்சாட்டப்பட்டு நீதிமன்றப்படியேறி இறங்கிக் கொண்டிருக்கிறார். இதனால், பெரியகுளம் பகுதியில் இளைஞர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஓ.பிஎஸ் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.

விரைவில் பெரியகுளம் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரவுள்ள நிலையில், இவர்களின் கோபத்தை குறைக்கவும் தனது தம்பியை ஓ.பிஎஸ் நீக்கியதாக கூறப்படுகிறது. ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கவே அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார்’’ என்கிறார்கள் தேனி மாவட்ட அதிமுகவினர்.