கதிராமங்கலம் பிரச்சனையால் ரத்தம் கொதிப்பதாகவும், சேலம் மாணவி மீது குண்டர் சட்டம் பாயப்பட்டிருப்பதை வன்மையாக கண்டிப்பதாகவும் லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

பெரியார் பல்கலைகழகத்தில் இதழியல் படித்துவரும் மாணவி சேலத்தை சேர்ந்த வளர்மதி. இவர், மீத்தேன்,ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிரான துண்டு பிரசுரங்கள் சேலம் அரசு மகளிர் கலை கல்லூரிக்கு அருகில் விநியோகம் செய்தார்.

இதனால் நக்சலைட்டுகளுக்கு ஆட்கள் சேர்ப்பதாக குற்றம் சாட்டி இவரை கடந்த 13 ஆம் தேதி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இவரின் மீது திடீரென குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. 

இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், கதிராமங்கலம் பிரச்சனையால் ரத்தம் கொதிப்பதாகவும், சேலம் மாணவி மீது குண்டர் சட்டம் பாயப்பட்டிருப்பதை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், கடலில் எண்ணெய் மிதந்தது போல கதிராமங்கலத்தில் குழாய் வெடிப்பின் மூலம் எண்ணெய் காடாக காட்சி அளிக்கப் போவதாக அரசை சாடியுள்ளார்.