தமிழகத்தில் எதிரிகள் அம்பு வீசிக்கொண்டே இருப்பார்கள் எனவும் எதையும் சமாளிக்க தயாரானால் அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வாருங்கள் என கமலஹாசனுக்கும், ரஜினிகாந்துக்கும் மறைமுகமாக சவால் விடுத்துள்ளார் லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர்.

ரஜினிகாந்த் சில நாட்களுக்கு முன்பு தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துகொண்டார். அதில் பேசிய அவர் அரசியலுக்கு கண்டிப்பாக வருவேன் என்பது போன்று பேசினார்.

இதையடுத்து ரஜினி அரசியலுக்கு வரலாம் வரக்கூடாது என பலர் கருத்து தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து நடிகர் கமலஹாசன் சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று தெரிவித்தார்.

இதனால் தமிழக அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால் எதிர்கட்சிகள் கமலுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து செய்தியாளர்கள் லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தரிடம் கேள்விகளை எழுப்பினர்.

அதற்கு பதிலளித்து பேசிய அவர், அரசியலில் பலர் ஏவுவார்கள் அம்பு, எதிரிகள் சீவி விடுவார்கள் கொம்பு, வசமாக வந்து இழுப்பார்கள் வம்பு, இதையெல்லாம் எதிர்க்க வேண்டும் தெம்பு, என அவருக்கு உரிய அடுக்கடுக்கான வசனங்களில் பதிலளித்தார்.

மேலும், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் எதையும் சந்திக்க தயாரானால் அரசியலுக்கு வாங்க என்று கமலஹாசனுக்கும், ரஜினிகாந்துக்கும் மறைமுகமாக சவால் விடுத்தார்.