நாடாளுமன்றத்தில் வந்தது என்ன சட்டம் என்றே தெரியாமல் பாஜகவுக்கு பாதம் தாங்கியாக மாறி, கை தூக்கச் சொல்லும் போதெல்லாம் கைதூக்கி இதயத்தையும் மனசாட்சியையும் டெல்லிக்கு அடமானம் வைத்துவிட்டுப் பிழைக்கிற பழனிசாமிக்கு எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலினைப் பற்றி பேசுவதற்கு எந்தத் தகுதியும் இல்லை என்று திமுக எம்.பி.யும் அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளருமான டி.ஆர்.பாலு விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக டி.ஆர். பாலு வெளியிட்டுள்ள அறிக்கை:


"குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் இந்தியர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொல்லி இருக்கிறார். குடியுரிமைத் திருத்தச் சட்டமே, இந்தியாவுக்குள் அகதிகளாக வந்த அயல்நாட்டவருக்குத்தான் என்பதை அறியாத ஞான சூன்யம் தமிழகத்தின் முதல்வராக இருக்கிறார்.
ஈழத்தமிழர்களுக்கு எதிரான சட்டத்தில் அதிமுகவினரை வாக்களிக்க வைத்துவிட்டு, ‘இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வலியுறுத்தி வருகிறோம்’ என்றும் பழனிசாமி சொல்லி இருக்கிறார். இவர் யாரிடம் வலியுறுத்துகிறார்? நாடாளுமன்றத்தில் எதிராக வாக்களித்து விட்டு, வீட்டுக்குள் உட்கார்ந்து கொண்டு விட்டத்தைப் பார்த்து வலியுறுத்துகிறாரா?பச்சைப் பொய் பழனிசாமியாக அவர் மாறிவருகிறார் என்பதற்கு உதாரணம் இது.
கருணாநிதியின் பெயரைச் சொல்வதற்குக்கூட பழனிசாமிக்கு அருகதை இல்லை. கொள்கைக்காக, அரசியலுக்கு 13 வயதில் வந்தவர் அவர். பழனிசாமியைப் போல கொலை வழக்கில் இருந்து தப்புவதற்காக வந்தவர் அல்ல. கூவத்தூர் சாக்கடையில் மண்புழுவாய் ஊர்ந்து முதல்வர் ஆகிவிட்டதால், தன்னைப் பெரிய தலைவராக நினைத்துக்கொண்டு சண்டியரைப் போல வாய்க்கு வந்ததைப் பேசக்கூடாது. வரலாறு தெரிந்து பேச வேண்டும்.
நாடாளுமன்றத்தில் வந்தது என்ன சட்டம் என்றே தெரியாமல் பாஜகவுக்கு பாதம் தாங்கியாக மாறி, கை தூக்கச் சொல்லும் போதெல்லாம் கைதூக்கி இதயத்தையும் மனசாட்சியையும் டெல்லிக்கு அடமானம் வைத்துவிட்டுப் பிழைக்கிற பழனிசாமிக்கு, கருணாநிதியைப் பற்றியோ, எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலினைப் பற்றியோ பேசுவதற்கு எந்தத் தகுதியும் இல்லை. ஈழ அகதிகளை, ஏதோ தானே காப்பாற்றுவதாகச் சொல்லி இருக்கிறார் முதல்வர். ஈழ அகதிகளுக்காக அனைத்தும் செய்து கொடுத்தது திமுக ஆட்சியும் அப்போதைய முதல்வர் கருணாநிதியும்தான்.


அவர்கள் கொடுத்த அனைத்துச் சலுகைகளையும் பறித்தவர் ஜெயலலிதா. 1991-1995-ம் காலக்கட்டத்தில் ஈழத்தமிழர் அகதிகள் முகாம் தொடர்பான ஜெயலலிதாவின் உத்தரவுகள் என்னென்ன என்பதை பழனிசாமி கேட்டு வாங்கிப் படிக்க வேண்டும். அனைத்தும் ஈழத்தமிழர்களுக்கு எதிரானது. 1996-ல் மீண்டும் முதல்வராக வந்த கருணாநிதி, அனைத்துச் சலுகைகளையும் திரும்பக் கொடுத்தார். இதுதான் உண்மை வரலாறு!
எனவே அதிமுக கூட்டணி என்பது தமிழர் துரோகக் கூட்டணியாக ஆகிவிட்டது. அது வெளிச்சத்துக்கு வந்ததும்தான் எடப்பாடி பழனிசாமியும் ராமதாஸும் புதிய புதிய பசப்பு வார்த்தைகளைச் சொல்லி மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள். மக்களுக்கு இவர்கள் இருவரையும் நன்கு தெரியும். "யோக்கியன் வருகிறான், சொம்பை எடுத்து ஒழித்து வை" என்பது போன்ற ரகங்கள் இவர்கள்" என டி.ஆர்.பாலு விமர்சித்துள்ளார்.