அதிமுகவின் சமீபத்திய துரோகம், யார் சிலையையோ செய்து அதுதான் ஜெயலலிதா சிலை என்று திறந்து வைத்ததுதான் அலட்சியத்தின் உச்சகட்டம் என்று எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் தேதி, அதிமுக தலைமை அலுவலகத்தில் வெண்கல சிலை ஒன்று திறந்து வைக்கப்பட்டது. இதனை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் திறந்து வைத்தனர். 

அதிமுக தலைமை அலுவலகத்தில் திறக்கப்பட்ட ஜெயலலிதா சிலை, அவரைப்போல் இல்லை என்று சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனம் செய்யப்பட்டு வந்தது. முன்னாள் அமைச்சர் வளர்மதியைப்போல் உள்ளார் என்று வேறு ஒருவரைப்போல் உள்ளார் என்றும் பல்வேறு கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது.

இந்த நிலையில், மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ஜெயலலிதாவின் சிலையில் மாற்றம் செய்யப்படும் என்று கூறியிருந்தார். இதேபோல் மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக எம்பியுமான தம்பிதுரை, சிலை அமைப்பதில் அலட்சியம் ஏதும் இல்லை என்றும் கூறியிருந்தார்.

இது குறித்து பாஜகவின் எஸ்.வி.சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில், தங்கள் தலைவி ஜெயலலிதாவுக்கு அதிமுகவினரின் சமீபத்திய துரோகம், யார் சிலையையோ செய்து அதுதான் ஜெயலலிதா சிலை என்று திறந்து வைத்ததுதான் அலட்சியத்தின் உச்சக்கட்டம் என்று பதிவிட்டுள்ளார்.