புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் எல்லைக்குள் நடத்திய தாக்குதலில் சர்ஜிகல் ஸ்ட்ரைக்கை போல 100 சதவிகிதம் வெற்றிகரமாக முடிந்துள்ளது என்பதை மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் உறுதிப்படுத்தி உள்ளார். 

புல்வாமா தாக்குதலில் 49 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் பெரும் தாக்குதலை நடத்தியுள்ளது. விதிமுறைகளை இந்திய விமானப்படை மீறியுள்ளதாக பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இன்று காலை முதல் புலம்பத் தொடங்கியுள்ளனர். இதன் மூலம் அதிரடி சம்பவத்தை இந்திய ராணுவம் செய்திருப்பது உறுதியாகியுள்ளது. 

2 மிராஜ் 2000 என்ற ஜெட் போர் விமானம் 1,000 கிலோ எடை கொண்டு வெடிகுண்டுகளை தீவிரவாத முகாம்கள் மீது வீசியுள்ளது. சர்ஜிகல் ஸ்ட்ரைக்கை போன்று நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் 100 சதவிகிதம் வெற்றிகரமாக முடிந்தது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்கள் மீதும், லஷ்கர்- இ- தய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்புகள் முகாம்கள் மீதும் இன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இந்த சம்பவம் குறித்து மத்திய விவசாயத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இன்று எல்லைத் தாண்டி இந்திய விமானப் படை வான் வழி தாக்குதல் நடத்தியதில், தீவிரவாத முகாம்கள் முழுவதுமாக அழிக்கப்பட்டுவிட்டன'ன் என உறுதி செய்துள்ளார்.