உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பானைக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் தாக்கல் செய்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளது.


உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கில் தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து,  மற்ற மாவட்டங்களுக்குத் உள்ளாட்சித் தேர்தல் நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, 27 மாவட்டங்களில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் 2 கட்டமாக ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் டிசம்பர் 9 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

 
இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பானைக்கு எதிராக திமுக, மதிமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. மனுவில், வார்டு வரையறை பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை என இக்கட்சிகள் குறிப்பிட்டுள்ளன. இந்த வழக்கை அவரச வழக்காக விசாரிக்கவும் திமுக  தரப்பு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. திமுக உள்ளிட்ட கட்சிகளின் மனுவுக்கு பதில் மனுவை மாநில  தேர்தல் ஆணையம் நேற்று தாக்கல் செய்தது. அந்த மனுவில், கட்சிகள் குறிப்பிட்ட குற்ற்ச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. முழுமையாக வார்டு மறுவரையறை செய்துதான் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. ஏற்கனவே கட்சிகள் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் கரூரைச் சேர்ந்த வாக்காளர் முருகேசன் என்பவரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதேபோல விசிக சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளது. இன்று விசாரணையின்போது நீதிபதிகள் தெரிவிக்கும் உத்தரவின் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா என்பது தெரியவரும்.