காவிரி விவகாரத்தை தீர்ப்பதற்கான வரைவு செயல் திட்ட அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை மே 3ம் தேதிக்கு ஒத்திவைத்தது. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த கெடு மார்ச் 29ம் தேதியுடன் நிறைவடைந்தது. ஆனால், மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. இதனால் உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தாத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அதேநேரத்தில், உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று ஒன்றாக விசாரித்தது. அப்போது தமிழக அரசு, கர்நாடக அரசு, மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது.

தமிழக அரசின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு கடைசி நேரத்தில் மனு தாக்கல் செய்த மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தது.

மேலும், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பில் குறிப்பிடப்பட்டதையே ஸ்கீம் என்று குறிப்பிட்டோம். இதுதொடர்பான வரைவு செயல்திட்டத்தை தயார்படுத்தி மத்திய அரசு மே 3ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். செயல் திட்டத்தை உருவாக்குவதில் இருந்து மத்திய அரசு தப்பிக்க முடியாது என தெரிவித்த உச்சநீதிமன்றம், வழக்கின் அடுத்த விசாரணையை மே 3ம் தேதிக்கு ஒத்திவைத்தது.