தமிழகத்தில் 18 தொகுதிகளோடு 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திமுக தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக வரும் வெள்ளிக்கிழமையன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வர உள்ளது. 

இந்நிலையில் நேற்று மக்களவை மற்றும் தமிழக இடைத்தேர்தல் தொகுதிக்கு ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தமிழக தலைமை தேர்தல் அதிகார் சத்யபிரதா சாஹூ, சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, மக்களவைத் தேர்தலுடன் தமிழகத்தில் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய மூன்று தொகுதிகள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அவற்றிற்கான இடைத்தேர்தல் தற்போது நடத்தப்படாது என அவர் அறிவித்திருந்தார். 

இந்நிலையில் சென்னையில் நேற்று திமுக எம்பி, எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 3 தொகுதிகளிலும் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முன் வராவிட்டால், நீதிமன்றம் மூலம் இந்த 3 தொகுதிகளின் தேர்தலையும் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

இதனையடுத்து தமிழகத்தில் 18 தொகுதிகளோடு விடுபட்ட திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டது. இதனை ஏற்று கொண்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அவசரமாக வரும் வெள்ளிக்கிழமை விசாரிப்பதாக கூறியுள்ளார்.