வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளிப்பதாக காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் அறிவித்துள்ளார்.

பாமகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும், வன்னியர் சங்கத் தலைவராகவும் இருந்த காடுவெட்டி குரு, கடந்த 2018ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அதன்பிறகு குருவின் மகன் கனலரசன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர், பாமக தலைமை மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். தற்போது, மாவீரன் மஞ்சள் படை என்ற அமைப்பை உருவாக்கி கனலரசன் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை அவரது இல்லத்தில் கனலரசன் சந்தித்துப் பேசினார். அப்போது, திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், சென்னையில் காடுவெட்டி குருவுக்குச் சிலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில்;- காடுவெட்டி குரு அவர்களின் மகன் - மாவீரன் மஞ்சள் படையின் தலைவர் தம்பி கனலரசன் அவர்கள் என்னை சந்தித்து தங்கள் இயக்கத்தின் ஆதரவை திமுகவுக்குத் தெரிவித்தார். ஆக்கபூர்வமான பல கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட அவருக்கும் அவரின் இயக்கத்துக்கும் வாழ்த்துகளையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கனலரசன்;- கலைஞர் இருக்கும்போது 108 சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு பெற்றுத்தந்தார்.
அதேபோன்று தற்போது வன்னியர்களுக்கு 20 சதவீத உள் ஒதுக்கீட்டை திமுக பெற்றுத்தரும் என நம்புகிறோம். பாமகவினர் எங்களை திமுகவிடம் பணம் பெற்றுக்கொண்டு செயல்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

ஆனால் பாமக தான் பெட்டியை வாங்கிக் கொண்டு அங்கும் இங்கும் சென்று கொண்டிருக்கிறார்கள். தேர்தலில் நிற்பது குறித்து பின்னர் தெரிவிப்போம். வன்னியர்களுக்கான 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி திமுக.விடம் தான் கோரிக்கை விடுத்துள்ளோம். எனவே திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பாமக இருக்கும் கூட்டணியில் மாவீரன் மஞ்சள் படை இடம்பெறாது எனவும் தெரிவித்துள்ளார்.