கொரோனாவைக் கட்டுப்பத்தும் வகையில் கடந்த ஜூலை மாதம் முதல் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டுவருகிறது. இந்த மாதத்தில் கடைசி முழு ஊரடங்கு இன்று கடைபிடிக்கப்பட்டுவருகிறது. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருவதால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. மருத்துவத் தேவை, அவரசத் தேவை என்றால் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வரும் நிலையும் ஏற்பட்டது.


அத்தியாவசிய தேவைகளான காய்கறி, மளிகைக் கடைகள், இறைச்சிக்கூடங்கள், உணவகங்கள், பெட்ரோல் பங்குகள் உட்பட அனைத்து கடைகளும் இந்த ஊரடங்கில் மூடப்பட்டன. ஆம்புலன்ஸ், மருத்துவ சேவைகள், பாலகங்கள், மருந்தகங்கள் மட்டுமே செயல்பட்டன. தமிழகத்தில் கடந்த 9 வாரங்களாகவும் சென்னையில் மட்டும் 11 வாரங்களாகவும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கில் கடுமையான கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டன.
இந்நிலையில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.  அதில் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடைபிடிக்கப்பட்டு வந்த முழு ஊரடங்கு இனி இருக்காது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.