சென்னையில் எம்எல்ஏக்கள் விடுதியில் நடந்த ரெய்டை தொடர்ந்து வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமாருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
 அறையில் கைப்பற்றப்பட்ட துண்டு சீட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தமிழகத்தில் பறக்கும் படை, வருமான வரித் துறை ரெய்டு தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. வாக்காளர்களை வளைக்க பணப் பட்டுவாடாவைத் தவிர்க்கும் வகையில் இந்தச் சோதனைகள் நடைபெறுகின்றன. சென்னையில் உள்ள மூன்று நாடாளுமன்றத் தொகுதிகள், பெரம்பூர் சட்டப்பேரவை தொகுதியிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தேர்தல் பறக்கும் படையினருக்குக் கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது. எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் தொகுதி வாரியாக பணம் வழங்குவதற்காக அதைப் பிரிக்கும் பணி நடைபெறுவதாக வந்த தகவலின் அடிப்படையில் சென்னை சுவாமி சிவானந்தா சாலையில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் உள்ள ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர் உதயகுமார் அறையில் சோதனை நடத்தப்பட்டது

.
இந்தச் சோதனையின்போது அமைச்சர் உதயகுமாரின் அறையிலிருந்த பைகளில் சில துண்டு சீட்டுகள் கைபற்றப்பட்டன. பணம் வினியோகம் தொடர்பாக இந்தத் துண்டு சீட்டுகளில் தகவல்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.