கர்நாடக காங்கிரஸ் முன்னாள் எம்.பி. நடிகர் அம்பரிசின் மனைவி நடிகை சுமலதா மாண்டியா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த காலங்களில் அம்பரிஷ் மாண்டியா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வந்தார். அவர் மரணம் அடைந்து விட்டதால் அந்த தொகுதியில் தனக்கு டிக்கெட் வேண்டும் என்று சுமலதா காங்கிரசிடம் கேட்டு வந்தார்.

ஆனால், இந்த தொகுதியை கூட்டணி கட்சியான தேவேகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கேட்டது. அந்த கட்சிக்கு தொகுதி விட்டுக் கொடுக்கப்பட்டது.
அதில் முதலமைச்சர்  குமாரசாமியின் மகன் நிகில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து சுமலதா சுயேச்சையாக நின்றார். அவருக்கு பாஜக  ஆதரவு அளித்தது. இதில் சுமலதா வெற்றி பெற்றார்.  இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  நான் தேர்தலில் நின்ற போதே வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. ஜனதா தளம் (எஸ்.) வேட்பாளர் நிகில் என்னை போலவே அரசியல் அனுபவம் இல்லாதவர்.

ஆனால், அவரது குடும்பத்தில் உள்ள தலைவர்கள் மிகுந்த அரசியல் அனுபவம் கொண்டவர்கள். அவர்கள் நடந்து கொண்ட விதம்தான் எனது வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது. குறிப்பாக பெண்களை பற்றி அவர்கள் இழிவாக பேசியதன் மூலம் பெண்கள் ஓட்டு அவர்களுக்கு கிடைக்காமல் போனது.

குமாரசாமி பேசும்போது சுமலதா முகத்தில் கணவர் இறந்த துக்கத்தை கூட பார்க்க முடியவில்லை என்று கூறினார். இது, எவ்வளவு புண்படுத்தும் வார்த்தை. இதுபோன்ற செயல்கள்தான் அவர்களை தோற்கடித்தது என தெரிவித்தார்..

மிகப்பெரிய கட்சியான காங்கிரசுக்கு ஒரு இடம்தான் கிடைத்து இருக்கிறது. இதற்கு கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைவர்கள் எடுத்த தவறான முடிவுகள்தான் காரணம். அவர்கள் ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி வைத்திருக்க கூடாது. அதை மக்கள் ஏற்று கொள்ளவில்லை என சுமலதா தெரிவித்தார்.