sugar price hike in ration shops...anbumani condemned

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் விற்பளை செய்யப்படும் சர்க்கரையின் விலையை இரண்டு மடங்கு உயர்த்தியதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், உடனடியாக விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , தமிழ்நாட்டில் நியாயவிலைக்கடைகள் மூலம் வழங்கப்படும் சர்க்கரை விலை கிலோ 13.50 ரூபாயிலிருந்து ரூ.25 ஆக உயர்த்தப்படுவதாகவும், இவ்விலை உயர்வு வரும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைப் படுத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலன்களை பாதிக்கும் வகையிலான நியாயவிலைக்கடை சர்க்கரை விலை உயர்வு கடுமையாக கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்..

தமிழகத்தில் அனைவருக்குமான பொதுவினியோகத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை தமிழக அரசு ஏற்றுக் கொண்டால் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்பதால், அதை ஏற்கக்கூடாது என பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

ஆனால், கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில், அரசு நிர்வாகத்தைக் கவனித்துக் கொண்டிருந்த ஓ.பன்னீர்செல்வம் மத்திய அரசுடன் ரகசியமாக பேச்சு நடத்தி உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தினார் என குற்றம்சாட்டினார்.

தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்துவதால் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் அரசு பார்த்துக்கொள்ளும் என்று தமிழக அரசின் சார்பில் உத்தரவாதம் வழங்கப்பட்டது. ஆனால், இப்போது அந்த உத்தரவாதத்தை மறந்து விட்டு சர்க்கரை விலையை தமிழக அரசு உயர்த்தியிருப்பதை ஏற்க முடியாது; நியாயப்படுத்த முடியாது என குறிப்பிட்டுள்ளார்..

தமிழக அரசின் இத்தகைய மக்கள் விரோத செயல்பாடுகளுக்கு எதிராக அனைத்து தரப்பினரிடமும் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கிறது. அது மக்கள் புரட்சியாக வெடிப்பதற்கு முன்பாக பினாமி அரசு அதன் தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும் என்றும், ரேஷன் சர்க்கரை விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்றும் அன்புமணை ராமதாஸ் வலியிறுத்தியுள்ளார்..