தமிழகத்தைப் பொறுத்த வரை இபிஎஸ்ம் ஓபிஎஸ்ம் இணைந்து ஒன்றாக செயல்பட்டு வந்தாலும் இன்னும் அவர்களிடையே பெரும் பனிப்போர் நிலவுவதாக தெரிகிறது. இரு தரப்பினரும் பெரும்பாலும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம்  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த மதுசூதனன், அமைச்சர் ஜெயகுமாரை அடக்கி வையுங்கள் இல்லையென்றால் நடப்பதே வேறு என கோபத்தில் கொந்தளித்தாக தகவல்கள் வெளியாகின.

அண்மையில் நடந்த அதிமுக செயற்குழுக் கூட்டத்தில், ஓபிஎஸ் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தார். இபிஎஸ்ஐ மிரட்டத்தான் ஓபிஎஸ் இப்படி பேசினார் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வந்த துணை முதலமைச்சர் ஓபிஎஸ், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது சசிகலா குடும்பத்துக்கு எதிராக நடத்திய தர்மயுத்ததில் தான் வெற்றி பெற்று விட்டதாக தெரிவித்தார்.

அதிமுகவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியதைக் குறிப்பிட்ட செய்தியாளர்கள் கேட்ட   கேள்விக்கு பதில் அளித்த அவர், திருநாவுக்கரசரின் பகல் கனவு பலிக்காது என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் கமல்ஹாசனின் பேச்சு நொடிக்கு ஒரு முறை மாறும் என்றும் அதற்கெல்லாம் பதில் அளிக்க முடியாது என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார்.

தமிழக அமைச்சரவையை மாற்றி அமைப்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான் முடிவு எடுக்க வேண்டும் என்றும். அது அவரது தனிப்பட்ட அதிகாரம் என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார்.