திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீட்டில் நடந்த விழாவின் போது தொண்டர் ஒருவர் பளார் வாங்கி ரத்தக் காயத்துடன் கிளம்பியது அக்கட்சியினரை பரபரக்க வைத்துள்ளது.

 

திமுக தலைவர் கருணாநிதி இருந்த வரை கடந்த 30ன் ஆண்டுகளாக பொங்கல் விழாவின் போது கோபாலபுரம் இல்லத்திற்கு வரும் தொண்டர்களுக்கு 10 ரூபாய் பரிசளித்து மகிழ்வது வாடிக்கை. அவர் உயிரிழந்ததை தொடர்ந்து பொங்கல் அன்று சென்னை, ஆழ்வார்பேட்டை, சித்தரஞ்சன் சாலையில் உள்ள தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வீட்டுக்கு, நிர்வாகிகள், தொண்டர்கள் கூட்டம் கூட்டமாக வந்து சேர்ந்தனர். பலரும் மு.க.ஸ்டாலினுக்கு வரிசையில் நின்று, வாழ்த்து தெரிவித்தனர்.

அப்போது தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள் சிலர், ஸ்டாலின் அருகில் நின்று, கூட்டத்தை ஒழுங்குபடுத்தி வந்தனர். அப்போது கூட்டத்தை மீறி  ஆடியசைந்து வந்த தொண்டரின் கன்னத்தில் ஒருவர் 'பளாரென’ அரைவிட அந்தத் தொண்டர் கீழே விழுந்து அங்கிருந்த டீப்பாய் கண்ணாடி உடைந்தது. பின்னர் ரத்தம் சொட்டச்சொட்ட எழுந்திருக்கிறார் அந்தத் தொண்டர். இதனால், அங்கே கூச்சல், குழப்பமும் ஏற்பட வீட்டுக்குள் இருந்து ஓடி வந்த ஸ்டாலின் குடும்பத்தினர் காயம்பட்ட தொண்டரை சமரசப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.

'நல்ல நாளும் அதுவுமா, வாழ்த்து சொல்ல வந்து, ரத்தக்காயம் பட்டது தான் மிச்சம்' என அந்த தொண்டர், வேதனையோடு வீட்டுக்கு கிளம்பிச் சென்றார். இந்தச் சம்பவம் நடந்து ஒருவாரம் கடந்த நிலையில் இப்போது பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.