நமது பொருளாதார சூழ்நிலை சரியில்லாத நேரத்தில் தற்போது வங்கிகளின் இணைப்பை நடை முறைப்படுத்தியிருக்கக் கூடாது என சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

 

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ’தமிழக முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து எதிர்க்கட்சியினர் பொறாமையில் பேசி வருகின்றனர். இதனை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் மீதான வழக்கில் அவர் குற்றம் புரிந்திருப்பது தெளிவாகியுள்ளது. 8-க்கும் மேற்பட்ட வழக்குகள் அவர் மீது உள்ளன. எனவே ப.சிதம்பரம் தண்டனை பெறுவது உறுதி.

நமது பொருளாதார சூழ்நிலை சரியில்லாத நேரத்தில் தற்போது வங்கிகளின் இணைப்பை நடை முறைப்படுத்தியிருக்கக் கூடாது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கடந்த 10 ஆண்டுகளில் செய்த தவறை நாம் சரிசெய்யவில்லை. எனவே தற்போது நமது நிதி நிலைமை சற்று மோசமாகத்தான் உள்ளது.

தெலுங்கானா கவர்னராக தமிழிசை நியமிக்கப்பட்டது சர்க்காரியா கமி‌ஷன் அறிவுறுத்தல்படி தவறானது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியிருப்பது தவறானது. சர்க்காரியா கமி‌ஷனின் அறிவுறுத்தலை தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் ஏற்றுக் கொள்ளாத நிலையில் தற்போது அவர் கூறியதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஆளுநர்கள் எவ்வாறு நியமிக்கப்பட்டார்களோ அதே நடைமுறை தான் தற்போதும் பின்பற்றப்பட்டுள்ளது’’ என அவர் தெரிவித்தார்.