Subramanian Swamy Once again Target Rajini kanth Politics Entry
ரஜினியின் தினசரி ராசி பலனில் ‘இன்று வசவுகளை வாங்கிக் கட்டுவீராக!’ என்று போட்டிருக்கிறதோ என்னவோ. ச்சும்மா ஆளாளுக்கு அண்ணனை இன்னைக்கு வெச்சு செய்து கொண்டிருக்கிறார்கள்.
ரஜினியை ‘புஷ்வாணமாக போகும் பெரிய வெடி!’ என்று புது ஆங்கிளில் செம்மையாக கலாய்த்திருந்தார் சீமான். இது ரஜினி ரசிகர்கள் எனப்படும் ஐம்பதை தாண்டிய அங்கிள்களை காண்டாக்கி இருக்கிறது.
இந்நிலையில் நம்ம ”சுனா சுனாவும்” அதானுங்க சுப்பிரமணிய சுவாமியும் ரஜினியை கழுவி ஊத்தியிருக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்த் பண மோசடியில் ஈடுபட்டிருக்கிறார். அதற்கான ஆதாரங்கள் உள்ளன. ஸ்ரீ420 என்பது மோசடிக்கான இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு குறித்து விளக்கும் இந்தி திரைப்படம் ஆகும். அதில் வரும் டெல்லிவாலாவைப் போல ரஜினியும் ஒரு 420 தான்’’ என்று நேற்று முன்தினம் சு.சாமி கூறியிருக்கிறார்.
அத்துடன் அவர் நிறுத்தவில்லை. ‘‘ரஜினிகாந்த் படிக்காதவர். அறிவற்றவர். அவர் அரசியலுக்கு லாயக்கற்றவர்’’ என்றும் சு.சாமி கூறினார். இதனை தொடர்ந்து இன்றும். ரஜினியின் அரசியல் எண்ட்ரிக்கு பின்புலமாக மோடி இருக்கிறாரா என்கிற ரீதியில் கேட்கப்பட்ட கேள்விக்கு...

“சசிகலா தலையில கூடத்தான் கைவைத்து ஆறுதல் சொன்னார் மோடி, அதனால என்னாச்சு. அது மாதிரிதான் இதுவும். ரஜினி வீட்டுக்கு மோடி போனது , ரஜினியை பி.ஜே.பி. பெருசா பார்த்ததெல்லாம் அப்போ.” என்றவர் “அவனெல்லாம் அரசியலுக்கு வரமாட்டான்.” என்று ஏக வசனத்தில் ரஜினியை ஒருமையாக பேசிக் கொட்டியிருக்கிறார்.
ரஜினியை தாக்கி சுனா.சுனா பேசியதை பா.ஜ.க. பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. காரணம் எப்போதுமே கட்சி செல்லும் திசைக்கு எதிர் திசையில் செல்வதுதான் சுவாமியின் சுபாவம் என்று விட்டுவிட்டார்கள். ஆனால் ரஜினியின் ரசிகர்களுக்குத்தான் எகிறி நிற்கிறது ஆத்திரம்.
இந்த இடத்தில் சு.சு.வின் ஸ்டேட்மெண்ட் மூலம் இன்னொரு உள் அரசியல் புரிந்திருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கலாய்க்கிறார்கள். அதாவது ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த மோடி சசியின் தலைமீது கைவைத்தார். சில நாட்களில் பன்னீர் மூலம் கட்சி உடைக்கப்பட்டு, சசியும் உள்ளே தள்ளப்பட்டு அவரது பொதுச்செயலாளர் பதவியும் ஊசலாடிக் கொண்டிருக்கிறது.

அது போல் ரஜினி மேல் மோடி பாசம் காட்டினாலும் அது ரஜினியை அமிழ்த்தி அடக்கவேயன்றி அவரை வளர்த்துவிட அல்ல என்று சு.சு. சொல்லாமல் சொல்லியிருக்கிறாரோ என்று இந்த ஸ்டேட்மெண்டுக்கு புது விளக்கம் கொடுக்கிறார்கள்.
இது இப்படியிருக்க ரஜினி எப்படியும் இந்த முறை அரசியலுக்கு வந்துவிடுவார், நாமும் பொறுப்புகளை வாங்கிக் கொள்ளலாம், தேர்தலில் நின்று போட்டியிடுவது ஜெயிப்பதெல்லாம் கற்பனைக்கு அப்பாற்பட்ட விஷயம்.
ஆனால் ஜெயிக்கும் கட்சியுடன் கூட்டணி வைத்து நாமும் அரசியல்வாதியாக ஊருக்குள் ரவுண்டு வரலாம், நாலு காசு பார்க்கலாம் என்றெல்லாம் கற்பனையிலிருந்த அவரது ரசிகர்களுக்கு இந்த தொடர்ச்சியான எதிர்ப்புகள் பயத்தை கொடுத்திருக்கின்றன. காரணம், எதிர்ப்புகள் வலுத்தால் அரசியல் எண்ணத்தை இன்னும் சில வருடங்களுக்கு தள்ளிப்போட்டுவிட்டு ‘போர் வரட்டும் பார்த்துக் கொள்வோம். அதுவரையில் கவனமாக இருங்கள்.’ என்றபடி கூலாய் எஸ்கேப் ஆகிவிடுவாரோ என்கிற பயம்தான்.
