suba vee talks about rajini political entry
தி.மு.க. மீது சர்ச்சை மழை பொழியும் போதெல்லாம் அதை மறுத்து விளக்க குடை பிடிக்கும் அதன் தோழமை ஆளுமைகளில் முக்கியமானவர் சுப.வீரபாண்டியன். திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் எனும் தி.மு.க. ஆர்வலரானவர் இவர்.
கருணாநிதி கடந்த முறை முதல்வராக இருந்த போது பிரபாகரனின் அம்மா பார்வதியம்மாள் சிகிச்சை பெற சென்னைக்கு விமானத்தில் வந்தார். ஆனால் மத்திய அரசின் முடிவால் திருப்பி அனுப்பப்பட்டார். இந்த விவகாரத்தில் கருணாநிதியை விமர்சனங்களால் கடைந்தெடுத்தனர் வைகோ, நெடுமாறன் உள்ளிட்டோர்.
அந்த பிரச்னைக்கு சுமார் 7 ஆண்டுகள் கழித்து சமீபத்தில் தனது முகநூலில் விளக்கம் கொடுத்து ’அந்த விஷயத்தில் தலைவர் கலைஞர் எந்த தவறும் இழைக்கவில்லை.’ என்று கருணாநிதியை காப்பாற்றியிருந்தார் சுப.வீ. தோழர் தியாகுக்கும் இது தெரியும் என்று சொல்லியிருந்தவர் கூடவே வைகோ பெரும் அரசியல் செய்து கருணாநிதி மீது பழி விழுவது போல் நடந்து கொண்டதாகவும் மறைமுகமாக சாடியிருந்தார்.

இதை ம.தி.மு.க.வின் தரப்பிலிருந்து சிலர் எதிர்த்து எதிர் பதிவிட்டனர். இந்த சமயத்தில் வாலண்டியராக ஆஜரானார் தியாகுவின் மனைவியும், கவிதாயினியுமான தாமரை. அவர் கருணாநிதியை காப்பாற்றுவதற்காக சுப.வீ. சொல்லியிருந்ததெல்லாம் பொய். சுப.வீ தினம் தினம் பொய்தான் பேசுகிறார் என்று ஆரம்பித்து ஒரு பாடு அவரை சாடித்தள்ளியிருந்தார்.
இதற்கு சில நாட்கள் மெளனம் காத்துவிட்டு சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் சொல்லியிருக்கும் சுப.வீ....”தாமரை கூறுவது போல் நான் சொல்வது பொய் என்றால், தியாகு வாய் திறந்து அன்று நடந்ததை விளக்கட்டுமே! தியாகு ஏன் மெளனம் காக்கிறார். காரணம் என் வாக்கில் அத்தனையும் உண்மையிருக்கிறது.
தாமரையை சிறந்த கவிஞராக நான் நினைக்கிறேன். ஆனால் இந்த சுப.வீ. பொய்யர், பொய்யர் என்று மட்டுமே தாமரை எடுத்துக் கொள்வாரேயானால் அவரை சிறந்த கவிஞர் என்று சொல்வது பொய்யாகட்டும். ” என்று நறுக் பதிலடி கொடுத்தவர்...
“ரஜினி எனும் பிம்பத்தை உருவாக்கி தி.மு.க.வுக்கான செல்வாக்கை குலைக்க சிலர் முயலுகின்றனர்.

ஆனால் அது விழலுக்கு இறைக்கும் நீர்தான். இந்த நொடியில் எந்த தேர்தல் வைத்தாலும் ...அது சட்டமன்றமோ, நாடாளு மன்றமோ அல்லது உள்ளாட்சியோ. எதுவாகினும் ஜெயிக்க போவது தி.மு.க.தான். முதல்வராக போவது தளபதி ஸ்டாலின் தான்.
இந்த உண்மையை தாங்கிக்க முடியாமல், எதையாவது செய்து தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பை குறைக்க முடியாதா என்று திரிபவர்களே ரஜினி பிம்பத்தை உருவாக்குகிறார்கள். அவர்கள் விரைவில் ஓய்ந்து போவார்கள்.” என்று தி.மு.க.வுக்கு ஆதரவாக வழக்கமான தனது நயமான மொழியில் இசைத்திருக்கிறார்.
சுப.வீ கொடுத்திருக்கும் இந்த சூப்பர் நம்பிக்கை டீ ரஜினி பரபரப்பால் சோம்பிக் கிடந்த தி.மு.க.வினரை தட்டி எழுப்பியிருக்கிறது.
ஹும் ஆளாளுக்கு ஒரு கனவு இருக்கிறது!
