students clean the toilet in palladam govt school

திருப்பூர் அருகே அரசு பள்ளியில் கழிப்பறையை மாணவர்கள் கழுவிய சம்பவம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அந்தப்பள்ளியில் ஆய்வு நடத்தினர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த பெத்தாப்பூச்சிபாளையம் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப்பள்ளியில் கழிவறை முறையாக சுத்தப்படுத்துவதில்லை என கூறப்படுகிறது.

கழிவறையை சுத்தப்படுத்த போதிய ஆட்கள் கிடைப்பதில்லை என்பதால், அந்தப்பள்ளியில் படிக்கும் மாணவர்களே சுத்தம் செய்வதாகவும், இதற்காக மாணவர்களை காலையிலேயே சீக்கிரம் பள்ளிக்குவந்து கழிவறையை சுத்தம் செய்வதற்காக வர வேண்டும் என்று நிர்வாகம் கட்டாயப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்கள் கழிவைறையை கழுவி சுத்தம்செய்வதுபோல் படங்களும், வீடியோவுஙம வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், கடந்த வாரம் பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியரை சந்தித்து தங்களது அதிருப்தியை தெரிவித்தனர். ஆனால் பள்ளியின் தலைமை ஆசிரியர், நாங்கள் கட்டாயப்படுத்தி கழிவறையை கழுவச்சொல்லவில்லை என்றும், கழிவறையை உபயோகிக்கும்போது, தண்ணிர் ஊற்றச்சொன்னோம், ஆனால் அதை யாரோ ஊதிப் பெரிதாக்கிவிட்டார்கள் என தெரிவித்தார்.

ஆனால் மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்வது போன்று வெளியாகியுள்ள வீடியோவில், மாணவர்கள் சிலர் கையில் துடைப்பத்துடன் கழிவைறையை சுத்தம் செய்வதுபோல் உள்ளதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்த கல்வித்துறை அதிகாரிகள், அந்த பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

ஏற்கனவே திருவள்ளூர் அருகே இதே போன்று, மாணவிகள் அரசு பள்ளியில் கழிவைறையை சுத்தம் செய்வதுபோல வீடியோ வெளியானதால் அப்பள்ளியின் தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.