கொளத்தூர், சேப்பாக்கம், காட்பாடி, திருச்சி மேற்கு, திருவண்ணாமலை ஆகிய தொகுதியில் திமுக பணம் பட்டுவாடாவில் ஈடுபட்டு வருவதால் தேர்தலை நிறுத்த வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

கொளத்தூர், சேப்பாக்கம், காட்பாடி, திருச்சி மேற்கு, திருவண்ணாமலை ஆகிய தொகுதியில் திமுக பணம் பட்டுவாடாவில் ஈடுபட்டு வருவதால் தேர்தலை நிறுத்த வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி திமுக பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டு வருவதாக சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் பாபு.முருகவேல் ஆகியோர் புகார் அளித்தனர். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார். திமுக ஜனநாயக படுகொலை செய்வதில் சிறந்த கட்சி என்றும், ஜனநாயகத்தை விட பண நாயகத்தின் மீது திமுக அதிக நம்பிக்கை வைத்துள்ளதாகவும் கூறினார். மேலும், திருமங்கலம் பார்முலாவை திமுக தற்போது பயன்படுத்தி வருவதாக கூறிய அவர், இந்த சட்டமன்ற தேர்தலிலும் திமுகவின் பணம் தாராளமாக விளையாடி வருகிறது என்றும், பாரபட்சமின்றி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 

கொளத்தூர், சேப்பாக்கம், காட்பாடி, திருச்சி மேற்கு, திருவண்ணாமலை ஆகிய தொகுதியில் திமுக பணம் பட்டுவாடாவில் ஈடுபட்டு வருவதாக சுட்டிக்காட்டிய அவர், செயற்கை வெற்றி பெற வேண்டும் என்று திமுக போராடி வருகிறது என்றார். எனவே மேற்கண்ட இந்த 5 தொகுதியிலும் தேர்தலை நிறுத்த வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூறினார். சன் டிவியில் தொடர்ச்சியாக தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சாரம் தொடர்பான செய்திகளை ஒளிப்பரப்பி வருவதாக கூறிய அவர், சன் டிவியை தடை செய்ய வேண்டும் என்றும் குற்றம்சாட்டினார். தேர்தல் ஆணையம் விருப்பு வெறுப்பின்றி செயல்பட வேண்டும், ஒருதலை பட்சம் கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.