sterlite protest by women is the reason for started the gud fire

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காக கிளம்பிய பேரணியின் போது முன்வரிசையில் இருந்த பெண்களின் மார்பை பிடித்து தள்ளி போலீசார் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஆண்கள் போலீசாரை தட்டிக் கேட்டபோதுதான் மோதலும் பின்னர் வன்முறையும் நிகழ்ந்ததாக அதில் கலந்து கொண்ட பெண்கள் ஆவேசமாக தெரிவித்தனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக 100 நாட்களாக போராடி வந்த தூத்துக்குடி மக்கள் திட்டமிட்டபடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காக பனிமயமாதா ஆலயத்தில் இருந்து பேரணியைத் தொடங்கினர். முன்வரிசையில் இருந்த பெண்கள் ஆவேசமாக முழக்கம் இட்டபடி வி.வி.டி.சிலை அருகே சென்றபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

அப்போது போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்கள் நாங்கள் கலெக்டரிடம் மனு அளிக்கத்தான் போகிறோம்…எங்களை ஏன் தடுக்கிறீர்கள்? என கூறி மேலும் முன்னேறினர். அப்போது தான் அந்த அசிங்கத்தை போலீசார் அரங்கேற்றியுள்ளனர்.

அமைதியாக சென்ற ஊர்வலத்தில் பெண்கள் என்றும் பாராமல் அவர்களின் மார்பைப் பிடித்து போலீசார் தள்ளினர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்கள் கதறி அழத் தொடங்கினர். உங்க அக்கா, தங்கசிகளை இப்படித்தான் செய்வீங்களா என போலீசாரிடம் கேட்ட பெண்கள் தொடர்நது முன்னேறினர். அவர்களுக்கு பாதுகாப்பாக முன்வரிசைக்கு ஆண்கள் வந்தபோது தான் போலீசார், கண்மூடித்தனமாக தாக்கத் தொடங்கினர்.

இதையடுத்து எங்கிருந்தோ வந்த கற்கள் போலீசாரை பதம் பார்த்தது. அதுதான் சாக்கு என்று போலீசார் பெண்கள் , குழந்தைகள் என்று பாராமல் அடித்துத் துவைத்தனர். ஆனாலும் உறுதியாக நின்ற அந்த கூட்டத்தைப்பார்த்து ஆவேசமான போலீசார் எந்தவிதமான முன்னெச்சரிக்கையும் செய்யாமல் நேரடியாக துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர்.

ஊர்வலத்தில் வந்த பெண்கள், குழந்தைகளுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாதே என்று முன்னேறி வந்த ஆண்களின் மார்பையும், தலையையும் துப்பாக்கி குண்டுகள் பதம் பார்த்தன. அதுதான் தற்போது 13 பேரை பலி கொண்டுள்ளது.

அதே போன்று 100 நாட்களாக எந்த வன்முறையிலும் ஈடுபடாத போராட்டக்குழுவினர், எப்படி வன்முறையை கையில் எடுப்பார்கள் என கேள்வி எழுப்பினர். மேலும் கலவரம் செய்ய யாராவது குடும்பத்துடனா வருவார்கள் என கேள்வி எழுப்பிய பெண்கள், சாதாரண உடையில் வந்த போலீசார்தான் வாகனங்களுக்கு தீ வைத்து வன்முறையை கட்டவிழ்த்து விட்டதாகவும் குற்றம்சாட்டினர்.

போலீசார் திட்டமிட்டே இப்படி ஒரு காரியத்தை அரங்கேற்றியுள்ளனர் என்றும், இதே போலிசார் தங்கள் வீட்டுப் பெண்களின் மார்பில் இப்படி கை வைப்பார்களா எனவும் ஆவேசமாக தெரிவித்துள்ளனர்.