அரசியல் ஒரு விநோத விளையாட்டு. கோடம்பாக்கத்தில் சளி பிடித்தால் சம்பந்தமேயில்லாமல் கொத்தமங்கலத்தில் தும்மல் விழும். ஆனால் நுணுக்கமாக கவனித்தால் அதில் ஒரு அரசியல் ஒளிந்திருக்கும். 

அப்படித்தான் சுட்டிக் காட்டப்படுகிறது ’அப்பல்லோ இட்லி’ விவகாரம். அதாவது ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருந்த நாட்களில் டோட்டலாக ஆன செலவு குறித்த பில் சமீபத்தில் வெளியானது. இதில் சாப்பாடு செலவு மட்டும் ஒரு கோடியே பதினேழு லட்சம்! எனும் தகவல் பெரிய விமர்சனத்துக்கு உள்ளானது. 

‘வெறும் இட்லிய வித்தே அப்பல்லோக்காரன் கோடியா அள்ளுறான்! அப்பல்லோவுல ஐ.சி.யு. சார்ஜை விட கேண்டீன் தான் காஸ்ட்லி! தொண்டருங்க ரோட்டுல காய்ஞ்சு கிடந்தப்ப சசி கோஷ்டியும், அமைச்சர்களும் அப்பல்லோ கேண்டீன்ல கபடி ஆடியிருக்காங்க....’ என்றெல்லாம் வெரைட்டி வெரைட்டியாய் விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக ‘அப்பல்லோ இட்லி’ என்பதை மையமாக வைத்து மிம்ஸும், விவாதமுமாக போட்டுத் தாக்குகிறார்கள். 

 

ஆனால் இந்த நேரத்தில் அரசியல் விமர்சகர்கள் சில விஷயங்களைச் சுட்டிக் காட்டுகிறார்கள். ‘அப்பல்லோ கேண்டீன் பில் திட்டமிட்டே பெரிதாக்கப்படுகிறது. அதாவது, ஸ்டெர்லைட் விவகாரத்தை மறைக்கவே ஜெயலலிதா சாப்பிட்ட இட்லியின் தொகையை பூம் செய்துவிட்டு விஷயத்தை திசைதிருப்பி வருகிறார்கள். ஸ்டெர்லைட் மூடப்பட்ட விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் பெரிய அண்ணன் போல் நடந்து வருவது தெரிந்ததே. கோர்ட் பேச வேண்டிய விஷயங்களை இந்த தீர்ப்பாயம் பேசுவதோடு மட்டுமில்லாமல் ஸ்டெர்லைட் திறக்கப்படுவதற்கான எல்லா காரியங்களையும் அதுவே செய்து கொடுத்துவிடும் போல் இருக்கிறது. 

துவக்கத்தில் ‘ஸ்டெர்லைட் திறக்கப்படாது’ என்று உறுதியாக அடித்துச் சொல்லி வந்த தமிழக அரசும் இப்போது மெதுவாக வார்த்தையை மாற்றிப் பேச துவங்கியுள்ளது. இதனால் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் ஸ்டெர்லைட் துவக்கப்படுவதற்கான அனுமதி கிடைக்கலாம் எனும் சூழல் உருவாகி வருகிறது. இந்த சூழலில், தமிழக மக்கள் முழுக்க முழுக்க இந்த பிரச்னையை பற்றிப் பேசி மீண்டும் ஸ்டெர்லைட் விவகாரம் பற்றி எரிந்து, திறப்புக்கு தீங்கு வந்துவிடக்கூடாது எனும் எண்ணத்தில் திட்டமிட்டு இப்படி அப்பல்லோவில் ஜெ., தரப்புக்கு சாப்பாட்டு ஆன பில் விவகாரத்தை வெளியிட்டு பெரிதாக்கி வருகிறார்கள். இதுதான் பின்னணி.” என்கிறார்கள். அடேய்களா...இட்லியின் பின்னணில் அரிசிமாவு இருக்கலாம், அரசியலுமா இருக்கணும்?