தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 7-ம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டில் நடைபெற்றிருக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் இதுவரை நடைபெறவில்லை. வார்டு வரையறை, பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு உள்ளிட்ட விஷயங்களால் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை. உயர் நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை. இந்த விவகாரம் உச்ச நீதிமன்றம் சென்ற நிலையில், தற்போது தேர்தலை நடத்த நீதிமன்றம் கெடு விதித்தது. டிசம்பர் முதல் வாரத்துக்குள் உள்ளாட்சித் தேர்தல் அட்டவணையை அறிவிப்பதாக மாநில தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் உறுதி அளித்திருந்தது.


தற்போது உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 7ம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக பழனிச்சாமி கூறுகையில், “இந்த வார இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்போம் என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பதால் சனிக்கிழமைக்குள் செய்தியாளர்களை அழைத்து அதிகாரப்பூர்வமாக தேதியை அறிவிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

 
வார்டு மறுவரையறை, குறிப்பாக புதிய மாவட்டங்களில் அந்தப் பணிகளை செய்து முடித்தபிறகே உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் 6 மனுக்கள்  தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் விரைவில் விசாரணைக்கு வர உள்ள நிலையில், தேர்தல் தேதியை இந்த வாரத்துக்குள் அறிவிப்பதாக மாநில தேர்தல் ஆணையமும் அறிவித்துள்ளது.