உள்ளாட்சி தேர்தலில் டிடிவி.தினகரனின் அமமுகவுக்கு தனிச்சின்னம் வழங்க மாநில தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, அமமுக கட்சி நீதிமன்றத்தை நாட திட்டமிட்டுள்ளனர். 

அதிமுகவில் இருந்து பிரிந்த டிடிவி. தினகரன் தனிக்கட்சியை உருவாக்கினார். தனது கட்சிக்கு பொதுச்செயலாளராக பொறுப்பு ஏற்ற டிடிவி. தினகரன், அதற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரை சூட்டினார். இதை முறைப்படி அரசியல் கட்சியாக பதிவு செய்ய கடந்த ஏப்ரல் மாதம் 22-ம் தேதி தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பம் செய்தார். இதற்கான ஆவணங்கள் அக்டோபர் மாதம் 24-ம் தேதி தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பெயரில் கட்சியை பதிவு செய்ய ஆட்சேபம் இருந்தால் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. யாரும் ஆட்சேபம் எதுவும் தெரிவிக்காததால் மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்நிலையில், அமமுகவுக்கு தேர்தல் ஆணையம் அரசியல் கட்சி என்ற அங்கீகாரத்தை வழங்கி உள்ளது. மேலும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் 29-வது பிரிவின் கீழ் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சி பதிவு செய்யப்படுகிறது. இது நவம்பர் 25-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்நிலையில், நடைபெற இருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அமமுக போட்டியிடும் என்று டிடிவி. தினகரன் அறிவித்துள்ளார். இதில் போட்டியிடும் அமமுக வேட்பாளருக்கு பொதுச்சின்னம் வழங்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணைத்திடம் தினகரன் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தினர். 

இதனையடுத்து, உள்ளாட்சி தேர்தலில் டிடிவி.தினகரனின் அமமுகவுக்கு தனிச்சின்னம் வழங்க மாநில தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளதாக அக்கட்சியின் பொருளாளர் வெற்றிவேல் தகவல் தெரிவித்துள்ளார். ஏன் வழங்க முடியாது என்ற காரணத்தை நாளை எழுத்துப்பூர்வமாக அளிப்பதாக கூறியுள்ளனர். மாநில தேர்தல் ஆணையத்தின் பதில் கிடைத்தவுடன் நீதிமன்றத்தை நாட உள்ளோம் என வெற்றிவேல் கூறினார். இதுதொடர்பாக அமமுக வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறுகையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்ற அடிப்படையில் முன்னுரிமை மட்டும் தரப்படும் என மாநில தேர்தல் ஆணையம் கூறுகின்றனர்  என தெரிவித்துள்ளார்.