திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.

வழக்கமாக திமுகவின் உயர்மட்ட அளவிலான கூட்டங்கள் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுவது வழக்கம். கலைஞர் இருந்த வரை அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் கூட அண்ணா அறிவாலயத்தில் தான் நடைபெறும். இப்படி பொதுக்குழு கூட்டத்தை அறிவாலயத்தில் நடத்த வேண்டும் என்பதற்கு தான் கலைஞர் அரங்கமே அங்கு கட்டப்பட்டது. ஆனால் கடந்த மாதம் திமுக பொதுக்குழுவை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் கூட்டினார் ஸ்டாலின்.

வழக்கமாக அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் பொதுக்குழுவை எதற்காக ஒய்எம்சிஏ மைதானத்திற்கு ஸ்டாலின் மாற்றினார் என்று கேள்விகள் எழுந்தன. திமுக நிர்வாகிகளே கூட ஏன் இந்த திடீர் இடமாற்றம் என்று கேள்விகள் கேட்க ஆரம்பித்தனர். இந்த சூழலில் பொதுக்குழுவில் பேசிய ஸ்டாலின், கலைஞர் அரங்கத்தில் இடவசதி இல்லை என்றும், பொதுக்குழு உறுப்பினர்கள் கலைஞர் அரங்கிற்கு வெளியே அமர வேண்டிய நிலை இருப்பதாகவும் கூறியிருந்தார்.

ஆனால் முதல் முறையாக பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் காணும் வகையில் கூட்டம் நடைபெற்றதாகவும் ஸ்டாலின் பெருமை பட்டுக் கொண்டார். இதனால் இடவசதி காரணமாகவே பொதுக்குழு அண்ணா அறிவாலயத்தில் இருந்து மாற்றப்பட்டதாக நிர்வாகிகள் சமாதாம் அடைந்து கொண்டனர். இந்த நிலையில் திடீரென திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த கூட்டமும் வழக்கமாக அண்ணா அறிவாலயத்தில் தான் நடைபெறும். ஆனால் மாறாக இந்த முறை சென்னை தியாகராயநகரில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போதைய அரக்கோணம் எம்பியுமான ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான அக்கார்ட் மெட்ரோபாலிட்டன் 5 நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. பொதுக்குழுவிற்கு தான் இடம் போதாது, மாவட்டச் செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கும் கூடவா அறிவாலயத்தல் இடம் பத்தாது என்று கேள்விகள் எழுந்தன.

இந்த நிலையில் அண்ணா அறிவாலயத்தை மையமாக வைத்து சென்டிமெண்ட் பார்ப்பதே இந்த இடமாற்றங்களுக்கு காரணம் என்கிறார்கள். அண்ணா அறிவாலயம் கலைஞருக்கு ராசியாக இருந்ததாகவும் ஆனால் ஸ்டாலினுக்கு அதில் ராசி இல்லை என்று கருதுவதாகவும் எனவே தான் கட்சி விவகாரங்களை தற்போது அண்ணா அறிவாலயத்திற்கு அப்பாற்பட்ட இடத்தில் வைத்து பேசுவதாகவும், முடிவெடுப்பதாகவும் கூறுகிறார்கள்.