இனி காவிரி உரிமை மீட்பு பயணம் மேற்கொள்ளக்கூடாது என ஸ்டாலினுக்கு சீர்காழி காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, காவிரி உரிமை மீட்பு பயணத்தை ஸ்டாலின் உட்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடங்கி மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி, திருச்சி முக்கொம்பில் தொடங்கிய இந்த பயணம், வரும் 13ஆம் தேதி இருந்து கடலூரில் முடிவடைய உள்ளது.

இந்நிலையில் சென்னையில் ராணுவ தளவாடங்கள் கண்காட்சியை தொடங்கி வைக்க பிரதமர் மோடியின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உள்ளிட்ட கட்சிகளும், தமிழ், விவசாய அமைப்புகளும் கருப்பு கொடி காட்டுவோம் என்றும் கருப்பு உடை அணிவோம் என்றும் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றுவோம் என்றும் தெரிவித்திருந்தனர்.

இன்று பிரதமர் மோடி சென்னை வந்துள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விமான நிலையத்தில் கருப்பு கொடி காட்டப்பட்டது. நாகை அருகே சீர்காழியில் காவிரி உரிமை மீட்பு 6-ஆவது நாள் நடைப்பயணத்தை தொடங்கினார் ஸ்டாலின். அப்போது அவர் கருப்பு சட்டை, பேண்ட் அணிந்திருந்தார்.

அவரது காரிலும் கருப்பு கொடி கட்டப்பட்டிருந்தது. முத்தரசனும் கருப்பு சட்டை அணிந்தபடி ஸ்டாலினுடன் நடைப்பயணம் மேற்கொண்டார். இதனையடுத்து, இனி காவிரி உரிமை மீட்பு பயணம் மேற்கொள்ளக்கூடாது என ஸ்டாலினுக்கு சீர்காழி காவல்துறை சம்மன் ஸ்டாலினுக்கு அனுப்பியது. ஆனால் போலீசாரின் சம்மனை வாங்க மறுத்து ஸ்டாலின் தொடர்ந்து நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.