stalin warning district secretaries of dmk
உள்ளாட்சி தேர்தலில் ஒழுங்காக பணியாற்றி வெற்றியை கொடுக்க முடியாத மாவட்ட செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது, பொது செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலரும் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டம் முடிந்த பின்னர், மாவட்ட செயலாளர்கள் அனைவரையும் தனியே அழைத்து பேசிய ஸ்டாலின், தொண்டர்களுக்கும் மாவட்ட செயலாளர்களுக்கும் இடையே அதிகரித்து வரும் இடைவெளி குறித்து கவலை தெரிவித்துள்ளார்.

கட்சியின் அடிமட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் மக்களை விட்டு மாவட்ட செயலாளர்கள், வெகுதூரம் விலகி வருவதாக தமக்கு புகார்கள் வருவதாக குறிப்பிட்டார்.
உள்ளாட்சி தேர்தலில், அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பது சந்தேகமாக உள்ளது. மேலும் அக்கட்சி பல அணிகளாக பிரிந்துள்ளது. இந்நிலையில், திமுகவுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்க வேண்டிய கடமை ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களுக்கும் உள்ளது.
எனவே, இதை தவறவிடும், மாவட்ட செயலாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேவைப்பட்டால் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனால், வெளிறிப்போன முகத்துடன் மாவட்ட செயலாளர்கள் பலர் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர்.
