stalin warning admk ministers
அதிமுக ஆட்சியில் எல்லா துறையிலும் ஊழல் நடப்பதாக திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
குட்கா ஊழல் வழக்கை சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து குட்கா ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக காவல்துறை டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் பதவி விலக கோரி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டிஜிபி ராஜேந்திரனை பதவி விலக வலியுறுத்தி ஸ்டாலின் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் தங்கவைக்கப்பட்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ஊழல் குற்றச்சாட்டு எழுந்தவுடன் மத்திய அமைச்சர்களாக இருந்த தயாநிதி மாறன், ராசா ஆகியோர் கருணாநிதியின் அறிவுறுத்தலின்பேரில் அமைச்சர் பதவியிலிருந்து விலகினர். அதேபோல் தைரியமிருந்தால் பதவியிலிருந்து விலகி அமைச்சர் விஜயபாஸ்கரும் டிஜிபி ராஜேந்திரனும் சிபிஐ விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும் அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெறுகிறது. அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் ஊழல் செய்ததற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் லோக் ஆயுக்தாவை அமைத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்டாலின் எச்சரித்தார்.
