ஐந்து வருடங்கள் காப்பாற்றி வைத்திருந்த அந்த கெத்து இமேஜை, ஜஸ்ட் ஒரேயொரு ‘எஸ்.எல்.ஆர்.கேமரா’வின் மூலம் அவுட் ஆஃப் போகஸிங் ஆக்கியதோடு, வாய் தவறிக் கீழே போட்டு, சுக்கு நூறாக உடைத்தேவிட்டார் மோடி. இதன் விளைவாக ‘பொய் சொல்லி கூட்டம்’ எனும் பெயர் ஒட்டுமொத்தமாக பி.ஜே.பி.வகையறாவையே ஒட்டிக் கொண்டுவிட்டதுதான் அவலம். 

இந்நிலையில், ’ஸ்டாலின் எங்களோடு கூட்டணிக்கு பேசி வருகிறார்.’ என்று தமிழிசை சொன்னதற்கு எதிர்ப்பலையானது தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து தாறுமாறாக கிளம்பியுள்ளது. ஸ்டாலினும், திருநாவுக்கரசரும் தமிழிசையை வெளுத்துக் கட்டியுள்ளனர். ஸ்டாலின் “நான் பி.ஜே.பி.யுடன்  பேசி வருவதாக மிக அபாண்டமான பொய்யை, அதன் மாநில தலைவர் திமிழிசை கூறியிருக்கிறார். அவர் கூறுவதைப் போல் நான் அக்கட்சியுன் பேசவில்லை, மாறாக அக்கட்சி நடத்தும் ஆட்சியின் அக்கிரமங்களைத்தான் பேசி வருகிறேன். 

மேலும் தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டுள்ள தமிழிசை, டெபாசிட் தொகையை கூட பெற முடியாத அளவுக்கு தோல்வியை சந்திக்க இருக்கிறார். இது உறுதி. அந்த பயத்தில், இப்படியெல்லாம் பிதற்றிப் பேசுகிறார். ஒரு விஷயத்தை தெளிவாக கூறுவதென்றால், பொய் சொல்வதில் பிரதமர் மோடியைத் தெளிவாக பின்பற்றுகிறார் தமிழிசை.” என்று வெளுத்திருக்கிறார். 

தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவரான திருநாவுக்கரசரோ “பிரதமர் மோடிக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு அலை வீசி வரும் நிலையில், ஒருமித்தக் கருத்துடைய தலைவர்கள் சந்திப்பது இயல்பானது. இத்தகைய  சூழலில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி  கட்சிகள் இணைந்து ஆட்சிக்கு வருவதுதான் தேசத்தின் பல இன்னல்களுக்கு சரியான தீர்வாக அமையும். ஆனால் காங்கிரஸை ஒதுக்கிவிட்டு, மூன்றாவது அணி அமைப்பது சாத்தியமற்றது, தேவையற்றது. இந்நிலையில், ‘ஸ்டாலின் எங்களிடம் கூட்டணி தொடர்பாக பேசி வருகிறார்.’ என தமிழிசை கூறியுள்ளது மிக அபத்தமானது.” என்று தன் பங்குக்கு ஓங்கி அடித்திருக்கிறார். பாவம் தமிழக்கா!